பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் 303

என்பது ஆசான் வேண்டுகோள். அறிவு திடீரெனப் பெறுதற்கு இயலா வளர்ச்சிப் பொருள். அதனைக் கல்வியாலும் பயிற்சியாலும் சிறுகச் சிறுகவே பெருக்கிக் கொள்ளல்வேண்டும். ஒழுக்கப்பேறு அறிவுப்பேறு போல்வதன்று. எண்ணம் ஒன்று நமக்குத் திண்ணிதாகி விடுமேல் ஒரு நொடிப் பொழுதில் எனைத் தீய மனமும் மாறி, ஒழுக்கச் சான்றோர் ஆகப் பெறுவோம். எண்ண மாற்றத்தால் ஒருத்தன் வாழ்க்கையிலும் உலக நடப்பிலும் நிகழும் செயல் மாற்றங்கள் பலப்பல. மடியன் செல்வன் ஆதலும், ஈயாதான் வள்ளல் ஆதலும், கல்லாதான் அறிஞன் ஆதலும், பகைவன் உயிர் நண்பன் ஆதலும், கொலைஞன் பேரன்பன் ஆதலும், ஒரு நல் எண்ணப் புரட்சியால் எழும் இயற்கை வினைகள் அல்லவா? இன்று முதல் எதற்கும் பொய்யேன்” என்ற ஒரு நினைவு நெஞ்சுள் விழுந்து ஆழப் பதிந்து விடுமேல், உயிர் இழப்பதாயினும் காதல் போல வாய்மை காப்போம் அன்றோ எண்ணமட்டும் இருந்துவிட்டால், நீடிய ஒழுக்கம், யாரும் கொள்ளற்கு உரியது. எளியது: அகத்தது: அரிய விழுப்பம் தருவது.

வாழ்க்கைத் தோழர்களே! இறுதியாக, ஒரு வள்ளுவம் கேண்மின் மக்கள்பால் ஆசான் கண்டறிந்த பெருங் குறை ஒன்று உளது. அக்குறை தீர்ந்தாலல்லது வாழ்வுக்கு முன்னேற்றம் இல்லை. கல்வி அறிவு செல்வங்கள் வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஊக்கம் முயற்சி மடியாமை வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு. தூய்மை, வாய்மை, சால்புகள் வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு. நல்லவையெல்லாம் வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு. எண்ணிய எண்ணியாங்கு எய்தல் வேண்டும் என்ற பேரெண்ணம் நமக்கு உண்டு. இவ்வெண்ண மெல்லாம் நிரம்பி வழியும் நமக்கு, நன்கு ஊன்றிக் கொள்மின், எண்ணத் திட்பம் இல்லை, இல்லை, இல்லை. எண்ணியதை மீண்டும் மீண்டும் பெருக்கல் வாய்பாடு போல் நினைவுக்குக் கொண்டு வரும் எண்ணப் பயிற்சி இல்லை. உள்ளத்தால் உள்ளிய எனைச் சிறு பெருஞ் செயலையும் திரும்பத் திரும்ப உள்ளிக் கொள்ளும் உறைப்பு இல்லை. விரும்பிய ஒரு குணத்தைக் குறிக் கோளாகத் தேர்ந்து வைத்துக்கொண்டு, அதனைப் பல்காலும்