பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வள்ளுவம்

புலவரனைவரும் தத்தம் நூல்களில் குறள் மேற்கொண்டனர். திருக்குறள் இங்ஙன் தமிழாட்சி செய்யக் காணுதுமே யன்றி, தனக்குரிய தமிழ்க்குடி யாட்சியோ, நாட்டாட்சியோ செய்யக் கண்டிலம். தமிழரும் தமிழரசர்களும் வாழ்விலும் திருக்குறளை மறந்தனர்; பொருட்பால் விரிவுபட எழுதிய அந்நூலை அரசியலிலோ முற்றும் மறந்தனர். வாழ்வும் அழிந்தது; தமிழ் வேந்தும் அழிந்தது. அழியாதென் செய்யும் இன்றுங்கூட அரசுத் துறைப்பட்ட தமிழர் பல்லோர் குறளறியாமை சாலவுடையார். குறள் கல்லா முன்னைத் தமிழரின் எச்சம் இவர் என்றற்கு வேறு சான்றும் வேண்டுங்கொல்!

தமிழின் உயர்வுக்குத் தமிழர் அடிப்படை. வெள்ளத்தனைய மலர் நீட்டம் (595) என்பது போலத் தமிழன் வளர்ச்சியளவே தமிழ் வளர்ச்சி. தமிழ் வல்லது வாழ்வது; உயர்வது என்பதற்குத் திருக்குறளை நாம் சான்று காட்டுமாறு போல, தமிழன் வாய்மையன், முயற்சியன்; அறிவினன்; அன்பன்; மறவன் என்றற்கு வள்ளுவத் தோன்றலை ஞாலம் சான்று காட்டுமாறு நாம் குறள்வாழ்வு வாழ வேண்டும். செயற்படுத்தாக் கல்விக் குப்பையால், மனங்குவிந்து உடலொடுங்கும் மடிமையால், வசைச்சொற்களை அள்ளித் துற்றும் இகலால், குறள் வாழ்வு ஒருஞான்றும் யார் அமையாது காணிர்!

புகழ்சான்ற திருக்குறளைப் போற்றுகிறோம். பன்மானும் பறை சாற்றுகிறோம். அவ்வளவோடு அமைதல் ஆகாது: “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் (538) என்பது ஒரு தனி வள்ளுவம். “செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் என்பது குறள் காட்டும் அச்ச முடிபு. ஆதலின் யார்க்கும் செயல் வேண்டும் என்பதுதான் வள்ளுவர் நெஞ்சம். இச்செயல் நெஞ்சமே என் திருக்குறட் சொற்பொழிவுகளின் உயிர்நிலை. விளக்கமெல்லாம் இதன் சூழ்நிலை. குறள் கற்பேன்; நிற்பேன்; நிற்கக் கற்பேன்; குறள் வாழ்வு வாழ்வேன். வள்ளுவர் ஆணை’ என்று எண்ணுமின்! எண்ணத் திட்பங் கொள்ளுமின் இச் செயல் எண்ணத்தொடு சொற் பொழிவனைத்தையும் கேண்மின் எனக் கைகூப்பி வேண்டுதும்.