பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வள்ளுவம்

புரட்சியறிவு, தொழிலறிவு, ஆக்கவறிவு, பழக்கவறிவு, தன்னறிவு என்றின்னோரன்ன அறிவு நிலைகளாலும் ஒருத்தர்போல் ஒருத்தரிலர். பொருள் கல்வி அறிவுண்மைகள் ஒருபாற் கிடக்க, பொருளின்மை கல்வியின்மை அறிவின்மை என்ற இன்மை நிலைகளிலுந்தாம் நம்முள் வேறுபாடு கணிக்கத் தரமோ, சொன்மின்!

இனைய நிலைப்பன்மை வேறுபாடெல்லாம் நுணுகித் தெளிந்த ஒராசிரியர் வள்ளுவர். அவர் தெளிவுக்கு நம் கைக்குறளே கரி.

அழுக்காற்றினனும் பண்பிலானும் கல்லாதவனும் பேதையும் பெருஞ்செல்வர்களாக, அழுக்காற்றிலாரும் கற்றாரும் இற்பிறந் தாரும் நற்பொருள் சொல்வாரும் வறியவராகக் கண்டார். தமர் பசிக்க ஏதிலார் ஆர்த்தும் பேதைமையும், எச்சிற்கை உதறாக் கயமையும், ஒருவரால் நச்சப்படாவசையும், ஈயாது இவறும் மருளும், செயற்பால செய்யா வெறுமையும் பற்றிய செல்வர் பலராக, ஊர்நடுப் பழமரமாய், நீர் நிறை ஊருணியாய், மருத்து மரமாய், கைம்மாறு வேண்டா மாரியாய் வழங்கும் ஒப்புரவுச் செல்வர் சிலராகக் கண்டார். ஒன்றெய்தி நூறு இழப்பிக்கும் சூதிற்கும், மெய்யறியாமை விளைக்கும் கள்ளிற்கும், மாய முயக்குத் தரும் இருமனப் பெண்டுக்கும் படுஉம் செல்வச் செலவு ஒருபாலாக, பல குடும்பத்து ஈன்றாள் பசிதீர்க்க மாட்டா வறுமைப் பிணியை மறுபால் கண்டார். உண்ண இலன் என்று வெஃகுவாரையும், தீய செய்வாரையும், வாளா மடிவாரையும் ஒருபாற் கண்ட வள்ளுவர், நன்றே தரினும் அல்வழிச் செல்வம் வேண்டாம், உழைப்பே உளதியம், ஊக்கமே உடைமை என்னும் உயரிய கொள்கைச் செல்வரையும், அவர் வழி வினவி ஆக்கம் செல்லலையும் கண்டார்.

அன்பும் அறமும் பசியும் துறந்து ஈட்டுவாரும், வஞ்சகத்தால் பொருள் செய்து மகிழ்வாரும், எளியோர் அழப் பறிப்பாரும், பழிமலைந்து ஆக்கம் பெறுவாரும், இகழ்வார் பின் நின்று மானம் இழப்பாரும், பிறர் செல்வம் வெஃகித் தம்முடைமை விடுவாரும், இரந்தே வாழப் பயில்வாரும், சிறுபொருள் வருவது போலினும் முந்துற்றுத் தம்மையே விற்பாரும் ஆக, உலகம் பொருள்வகையான் பல நிலையாளரைக் கொண்டது. செல்வம் ஈட்டுதற்கண் நன்னெறி