பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளுவம்

பொருளானும் கல்வியானும் பன்னிலை சான்ற மக்கள் அறிவானும், மனத்தானும், பண்பானும் பட்ட நிலைப்பன்மை சொல்லத் தரமோ? ஆளுக்கு ஒருமுகம் போல ஆளுக்கு ஒரு தனிப் போக்குடையோம். காலையில் ஒன்றாவர் கடும்பகலில் ஒன்றாவர் மாலையில் ஒன்றாவர் மனிதரெல்லாம் என்றபடி, ஒருபொழுது இருந்ததுபோல் யார்கண்ணும் மறுபொழுது இருந்திலம். முகத்தளவு மக்கட் பொதுவமைப்பு உடையோமே யன்றி, நம் அனைவோர் அகமும் உயர்திணைப் பிறப்பிற்கு ஒத்த உள்ளம் என்று துணிதற் கில்லை. நட்பினர்க்கு நஞ்சு பெய்வாரும், பெயக்கண்டும் உண்டு துஞ்சும் நாகரிகரும் நம்மிடை யுளர். கொடுத்துக் கொளத்தகும் பெருநட்புடையாரும், கொடுத்து விடத்தகும் கூடாநட்புடையாரும் நம்மவர் ஆவர். நிலைகொள்ளுங்காறும் நன்கு ஒழுகுவாரும், கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்வாரும் நம்மினத்தவர் அல்லரோ செல்லாவிடத்து வெகுளி பெருக்கிக் கொள்வாரும் நம்மனோர்காண். உயிர் காக்கும் பெருநன்மை யாற்றுவாரும், கொன்றன்ன இன்னாசெய்வாரும் நம் சாதியரே. ‘உரமில்லாதார் மரம் (600), மக்கட் பண்பில்லாதார் மரம்போல்வர் (977), தலையின் இழிந்த மயிரனையர் (964), ஒழுக்கத்தின் இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் (133) என்ற இழி கூற்றுக்கும், “இளிவரின் வாழாத மானமுடையார் ஒளி (970), மக்கட்கு இறை என்று வைக்கப்படும் (388), நாணுக்கு உறைபதி என்னும் உலகு (1015), சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் (989) என்ற உயர் சொற்கிளவிக்கும் உரிமை பூண்டது மக்களினமே யன்றோ!

ஒத்தமுகம் இருவர்பாற் காண்கை அரிதாதல்போல, முற்றும் ஒத்த வாழ்க்கைநிலை பெற்றார் இருவரைக் காண்கையும் அரிதாம். மேலும், ஒருவர் முகந்தானும் காலக்கோட்பட்டும் நோய்முதற் பிற அல்லல்வாய்ப்பட்டும், மறைவாகவோ புலனாகவோ, மாற்றம் உற்றுச் செல்வது பொதுக்காட்சி. நம்மிடைப்பட்ட நிலைவேற்றுமைக் கெல்லாம் இயற்கைக் காரணம், ஒருவர்க்குக் கருத்தொடங்கி அமைந்த சூழ்நிலை, மனம், அறிவு செயல் அனையன இந்நனந் தலை யுலகத்து மற்றொருவர்க்கு முற்றும் ஒத்து அமைவதில்லை.