பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் 45

பொதுமையன் எனக் கூறுவாருளரோ? அன்னோன் மருத்துவத் திற்குப் பொதுமை நிலைக்களம் என்று புகல்வார் உளரோ?

சாதி சமய எண்ணமின்றியே அவற்றை எண்ணுவதும் வேண்டாமலே, உடலறிஞன் ஆள்தோறும் கைந்நாடி பார்த்து மருந்தளித்து உடல்நலம் செய்யுமாப் போலே, உள்ளத்தறிஞராகிய வள்ளுவரும் ஆள்தோறும் மனநாடி பார்த்து, நிலைக்கேற்ப அறங்கூறி, அகத்துாய்மை செய்பவர். அத்துாய்மை பெருக்கும் நல்லெண்ணங்களையும், கெடுக்கும் தீய வெண்ணங்களையும் மக்கள் மாட்டு ஆய்பவர். எந்நிலையினர்க்கு எவ்வறங் கூறினால், தூய்மை பெருகும், மாசு அகலும் எனத் தனித்தனி நிலைகளை நுணுகுபவர்.திருக்குறள் ஒரு மருந்துக்கடை. அவரவர் நோய்க்கேற்ப உரிய மருந்துகள் கடையில் உளவாதல் போல, திருக்குறளகத்தும் நம் வாழ்நிலைக்கேற்ப உரிய அறங்கள் உண்டு. ஆயின் ஒரு பெரு வேறுபாடு. நம் உடல் நிலையை மருத்துவனால் அறிந்து, மருந்தினை அவன் பாலோ பிறர் பாலோ வாங்குகிறோம். திருக்குறளோ, வள்ளுவர் தாமே செய்து வைத்துச் சென்ற உயிர் மருந்துக் கடை யாதலின், நம் வாழ்நிலையை நாமே நாடி, நிலைக்கேற்ற அறத்தினையும் நாமே கண்டு கொள்ளல் வேண்டும். ஈண்டு பொறுப்பும் எடுப்பும் நம் மேலன. தீதும் நன்றும் நம் எடுப்பிற் கேற்ப வருவன.

வள்ளுவ அன்பர்களே! சாதி சமய இன நாட்டுப் பொதுமை களை யான் மறுப்பதாகவோ நகைப்பதாகவோ எண்ணற்க. என்சொற்பொழிவுக் கருத்தினைப் பிறழ உணரற்க நல்லுலக வேராய திருக்குறளடிப்படையை மயங்கற்க, திருக்குறள் மக்கள் ஒவ்வொருவர்க்கும் ஞாலத்திற்கும் பயன் செய்ய வேண்டும்; வேண்டுமேல், வள்ளுவனார் தூய தனி நெறியை நாடித் தெளிய வேண்டும். நம் மனம்போன போக்கெல்லாம் திருக்குறளகத்துத் திணித்தலோ, காலக்கோட்பட்டு மயங்கலோ, திணித்தும் சுமத்தியும் அவ்வுண்மை நூற்குக் காலப்பெருமை வேண்டுமென்று தேடலோ, அறிவழகன்று: மக்கட்கு உய்தியுமன்று. ஆணும் பெண்ணும் மதிப்பு ஒத்த பிறப்பினர் என்றால் தொழில் கல்வி உடைகள் ஒன்றுபோல் வேண்டும் என்று துணியும் நமக்கு, மொழி வளர்ச்சி என்றால்