பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வள்ளுவம்

பொருள் வளர்ச்சி என்பதின்றி மொழிக்கலப்பு என்று அறையும் நமக்கு, கல்வி என்று ஒலிபல மொழிபல கற்பித்துச் சிறுவர் சிறுமிகளை மடவர்களாக்கும் நமக்கு, உடற்பயிற்சி என்று தொழிலொடு படாது தனிப்பயிற்சி செய்யும் நமக்கு, பொதுமை சுட்டாது தனியறம் கரைந்தார் வள்ளுவர் என்பது விளங்காப் பெரும் புதிராகவே தோன்றும்.

வாழ்வுப் பேரறிஞர் வள்ளுவர் நிலையாகக் கண்ட உண்மை யாது சாதி சமய நாட்டுப் பூசலனைய வெல்லாம், எரிமலை போலும் உள்ளப் பூசலின் வெளிப்பாடு. மூடிய நீர்க் கொதிப்புப் போலும் நெஞ்சக்கொதிப்பின் புறப்பாடு. காலம் பார்த்து உள் வேர்ப்பர் (487) என்றபடி, மன வெதுப்பின் வெளிப்பாடு. எம்முறு துயரஞ் செய்தோர் யாவதும், தம்முறு துயரம் இற்றாகுக’ என்று நிலைக் களங் காணா நீலியும், காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்’ என்று படாத துயரம் பட்ட கண்ணகியும் உரைத்தாங்கு வருவன அகக்கொதிப்பின் வெளியீடு. உள்ளப் பெரும் பூசல் தன் வெளிப்பாட்டிற்கு மடைவாய்போல, குடி சாதி சமயம் மொழி கட்சி நாடு என வரூஉம் பிரிவுகளை வாயில்களாகக் கொள்ளுகின்றது என்பதன்றி, இப்பிரிவுகள் அடைபடுமேல், வேறு பல புதிய வாயில்களை உண்டாக்கிக்கொண்டு, முன்னையினும் வேகமாகப் பூசல் விளைவிக்கும் என்பதன்றி, பொதுமைப் பறையால் உள்ளப் பூசல் அவிந்துவிடாது காண்.

யாண்டும் யாரும் வாய்திறந்தால், கைவரைந்தால், பொதுமை பொதுமை பொதுமை என்று பேசி எழுதும் நாளிற்றானே, ஞாலம் உயிர்ப்பூடற அழிந்து மட்டப்படுங்கொல் என்னும் அரிய பேரச்சம் தோன்றியுளது. பொதுமைப் பறையளவு போர்ப்பறையும் பெருகியுளது. பொதுமை யல்லது வேறு பேசா நாடுதொறும் காப்புச் செலவு முதலிடம் பெற்றுளது. அச்சக்காட்டுள் புகைந்தோங்கும் இகல் நெருப்பினைப் பொதுமை மூடி தணிக்க மாட்டுமோ? ஓர்மின்! மூடி சூடாற்றலை மிகுதிப் படுத்தும் இயல்பினது. விறகு மிகின், நெருப்புமிகின், மூடி என்படும் இகல் நெருப்பு அவிய, அச்சவிறகு பச்சையாக, அகநீர்மையே வேண்டப்படுவது. ஞாலப் பூசல்