பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வள்ளுவம்

இந்நன்றி யுணர்ச்சியை உதவி செய்தவரே கொல்லுவதும் உலகிடைக் காட்சி. இவ்வுலகியலை வள்ளுவர் அறிவர். நன்றி செய்தவன் செயப் பெற்றானைக் கைம்மாறு காட்டும்படி கட்டாயப் படுத்துகிறான். தினைத்துணை நன்றி செய்தவன் தானே பனைத் துணைக் கைம்மாறு வேண்டுகிறான். உதவி பெற்றானது நன்றி யுணர்ச்சியைக் கொல்லுகிறான். நன்றி காட்டத் தவக்கஞ் செய்வானேல், பகைத்துச் சீறி யெழுந்து, நெடுநாட் பகைவன் போல உயிரழி துன்பம் உறுத்துகிறான். இஃதோர் மனநிலை. இந்நிலைக்கண் உதவி பெற்றான் தன் மனத்துய்மை கெடா வண்ணம் நடப்பது யாங்ஙன்? சிறந்த மக்கட் பண்பான நன்றி யுணர்ச்சியைக் காப்பது யாங்ஙனம்?

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும் (109)

ஒருவரே நமக்கு நன்மையும் அன்மையும் செய்த நிலையில் - நல்லது ஒன்றாகத் தீயபலவாகச் செய்த நிலையில் - பண்பு வேண்டும் குறளிது. நினைவுப் படைப்பால் எதனையும் அழித்து ஆக்கிக் கொள்ளும் அகப்பெருவன்மை, வேண்டுங்கால், நம் நெஞ்சத்துப் பிறக்குமாதலின், இன்னா செயினும் உள்ளக் கெடும்’ என வழி சுட்டினார். “வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்” (622) எனப் பிறாண்டும் யாண்டும் இக்கற்பனை யாற்றலை ஒப்பற்ற தனிநெறியாக வலியுறுத்துவர். இதனைக் குறள் வழி என்றும், வள்ளுவ வழி என்றும், செயல் வழி என்றும் ஈண்டே ஆழப் பதித்துக் கொள்க. உதவியவன் நன்றியை அழிக்க முயன்ற நிலையிலும், அதனை அழியாது நொச்சி செய்தல் உதவி பெற்றவன் கடன் என்ற பண்பால்,

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று (108) என நிலையறம் கூறுவர் வள்ளுவர்.

தம் மக்கள் தாம் விதிப்பாரையே மணப்பது நன்றிக்கு அறிகுறி எனப் பெற்றோர் எண்ணலாமா? தன் கொள்கைகளை ஒத்துதித் தன்முன் புகழ்பவனே நன்றியுணர்வினன் எனக் கல்விக்கு உதவினான் கருதலாமா? தன் பகைவனைத் தனக்கும் பகைவ