பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வள்ளுவம்

கொள்வதில் ஓர் மனக் குற்றம் இல்லெனினும், அளவறியா வாழ்க்கை அறிவுக் குற்றம் உடைத்துக் காண். அக்குற்றம் மனக்குற்றத்திற்கு அடிப்படை காண். மிகினும் குறையினும் நோய் செய்யும் (941) என்றபடி, அவரவர் வயிற்றுப் பதம்போல் வாழ்வுப் பதம் நாடி, செரித்துப் பசிக்கும் நிலைக்கேற்ற செயற்குறள்களையே மிகுதியும் எண்ணவேண்டும். உரைகல் போலக் குறளொடு செயலை உராய வேண்டும். அந்நிலையிற்றான் வாழ்வு ஒளிபெறும்.

என் அறிவுடைச் சுற்றமே செயல் செயலென யான் துடித்துரைக்கும் வள்ளுவத்தினை ஒரளவு இவண் விளக்கஞ் செய்தேன். இனி, அன்பர்கள் தொடுத்த வினாவிற்கு, அஃதாவது கல்லாது குறளொதுக்கம் செய்ய வேண்டுமா என்ற வினாவிற்கு விடை காண்போம். குறள் முழுதும் கற்ற பின்னர்த்தானே நிலைக் கொத்த குறள்கள் இவையென ஒருவர் தெரிந்து கொள்ள இயலும். என் நிலையை உயர்த்தும், திருத்தும் குறள்கள் ஒரிரு அதிகாரங்களில் ஒருங்கு வாய்க்க மாட்டா. அதிகாரத்துக்குச் சிலவாக எல்லா அதிகாரங்களிலும் புகுந்து கிடக்கும். ‘அறிதோறு அறியாமை கண்டற்றால் (1110) என்ற பயில்வுக் குறளடியைக் காமத்துப்பால் கற்றாலன்றோ துறவி எடுத்துக்கொள்ளவியலும், ஆதலின் நிலைக்கு ஒத்த குறள்களைக் கண்டு கொள்ளுதற்கேனும் யாரும் குறள்முழுதும் கற்றாக வேண்டும்.

அவ்வினாவிற்கு இஃதோர் சிறுவிடை மழுப்பிய விடையென்று சிலர் கருதலாம். மழுப்புவது என் உட்கிடக்கையாயின், அன்னதோர் வினாவை நண்பர்கள் வினவினர் என்று இப்பேரவைமுன் சொல்லமாட்டேன். அவர் வினா பொருள் பொதிந்தது என்ற கருத்தானும், குறள்களைப் பள்ளிப் பிள்ளைகள்போல் இடை யிடையே கற்பாராயின், விட்டுவிட்டு மருந்துண்பார் போலப் பயன் பெறார் என்ற துணிபானும், அன்பர் தம் வினாவை வரவேற்றேன். பொருள்நிலை என்ற தலைப்பிட்டு, பேரன்பர்களே மற்றொன்று விரிப்பதுபோல் தோன்றினும், இவ்விரிவு இன்று பட்ட சிறு தலைப்பிற்குப் புறம்பே யொழிய, எடுத்துக்கொண்ட திருக்குறட் பெருந்தலைப்பிற்கு வித்தனைய கேண்மைத்து என்று எண்ணியே, முன்னைச் சொற்பொழிவின் ஒழிபாக ஈண்டுப் பேசுகின்றேன்.