பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆய்வு நூல்களில் தலையாயது
பதிப்புச்செம்மல் தமிழவேள்
முனைவர் ச. மெய்யப்பன்
 

உலகில் தலைசிறந்த அறநூல்களில் திருக்குறள் தலைமை சான்றது. அறமுரைக்கும் ஆன்றோர்களில் வள்ளுவர் முதல் வரிசையில் சிறப்பிடம் பெறுகிறார். தமிழ்நூல்களில் திருக்குறள் தலைமையும் தாய்மையும் உடையது. திருக்குறளின் செல்வாக்குப் படியாத தமிழ்நூல்கள் இல்லை.

நூறு ஆண்டுகளாகத் திருக்குறள் பல பதிப்புக்களைப் பெற்றுள்ளது. விடுதலைக்குப் பின் திருக்குறள் கல்வி சிறந்துள்ளது. திருக்குறள் பயிற்சி பெருகியுள்ளது. திருக்குறள் ஆய்வு வளர்ந்தோங்கி வருகிறது.

பல நூறு ஆய்வுநூல்கள் தோன்றினாலும் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் 'வள்ளுவம்' தலைமைச் சிறப்புப் பெற்றுவிட்டது.

காப்பிய ஆய்வுகளில் மாணிக்கனாரின் அரிய ஆராய்ச்சி நூல் 'கம்பர்' முதன்மை பெற்றுள்ளது. இவ்விரு நூல்களும் இந்தத் தலைமுறையின் தலைசிறந்த ஆய்வுநூல்களாகத் திகழ்கின்றன என்பது ஆய்வறிஞர்களின் கருத்து.

'வள்ளுவம்' வ.சுப. மாணிக்கனாரைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்குப் பேரறிவாளராக, பேராற்றல் மிக்கவராக அறிமுகப்படுத்தி யுள்ளது. வளர்ந்து வரும் தமிழாய்வில் வள்ளுவம் தனது சுவடுகளை அழுத்தமாகப் பதித்துள்ளது. நூலாசிரியர் முன்னுரையில் உரைப்பது போல இந்நூல் சீரிய திட்டத்துடன் தெளிவாக எழுதப்பட்டது. நூலின் பன்னிரண்டு கட்டுரைகளும் பன்னிரண்டு பெரு நூலுக்குரிய ஆய்வுக்களங்களைக் கொண்டுள்ளன.

புது நெறியாகிய கற்பனைப் பொழிவு நெறியில் கற்போர்நெஞ் சினைப் பிணைக்கும் வகையில் ஆசிரியர் நூலை இயற்றியுள்ளார். நூலின் நுண்கூறுகள் ஒவ்வொன்றின் சிறப்பினையும் விளக்குவது எம்நோக்கமன்று. இருப்பினும் தலைமைக் கூறாகிய வள்ளுவம்