பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் நிலை - 67

என நேர்விடை இறுப்பர். பேதை, கற்றான், அறிவுடையான் என்ற வேறுபாடின்றி மக்கள் மனங்களெல்லாம் பொருளொன்றின் மேலதாய் அழுக்கடையக் கண்ட ஆசிரியர், தாம் தூய்மை சொல்லும் இடம் பொருட்கண்ணது என்று துணிந்துவிட்டார். தனித்தோர் வாழ்வு ஆகுக, தொண்டு செய்வான் தோற்றிய கழகங்கள் ஆகுக, அவைகள் ஆகுக, பேரரசுகள் ஆகுக, பொருளில் ஒரொழுங்கு யாண்டுக் காணப்படுமோ ஆண்டு மனவொழுங்கும் நாணய மதிப்பும் காணப்படும். பொருளொழுக்கமே ஒருவன் அகவொழுக்கத்திற்கு உரைகல் என்பது வள்ளுவம். இக் கருத்தானன்றே மனப் பண்பு பேசும் இடந்தொறும் பொருட் பண்பினையும் தொடர்புபடுத்திப் பேசுவர். கள்ளாமை, வெஃகாமை, அழுக்காறாமை, நடுவு நிலைமை அதிகாரங்கள் சான்றாதல் காண்க. - உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் (282)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல் (113) இவ்விரண்டும் மனத் தூய்மை வேண்டும் பொருட் குறள்கள்.

தாய் குழந்தைமேல் வைத்த பேரன்பால், அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளரவேண்டுமென்று மிக்க வுணவை இடைவிடாது ஊட்டுகிறாள். தாயன்பால் பிள்ளை நோய்வாய்ப்படுகின்றது. கணந்தொறும் மெலிகின்றது. குழந்தை நோய் நீங்கிப் பருத்து வளர்வதற்கு மருந்து வினவுகிறாள். “அம்மா! குழந்தை பிழைக்க வேண்டும். வல்லுணவு ஆகாது. நீருணவே கொடு. மெலிவு பாராதே. நாட் பொறு” என மருத்துவன் வாய்ப்பச் சொல்லுகிறான். கொழுத்த உணவு திணித்த தாயன்பே இப்போது குறைந்த உணவு கொடுத்தற்குக் காரணமாகி நிற்கிறது. தன் மகவு பருக்காவிடினும் நலமாக வாழ்க என்று அவ்வன்பு அறிவுறுத்து கிறது. நோய்க்குக் காரணமாகிய தாயன்பை நோய் நீக்கத்திற்கு மருத்துவன் காரணமாக்கிக் கொண்டாற்போல, வள்ளுவரும் மனமாசிற்குக் காரணமாய மக்களின் பொருட்பற்றையே, அன்னோர் மாசு நீக்கத்திற்கும் காரணமாக்கிக் கொண்டார். இஃதோர் வள்ளுவப் புதுநெறி. -

a.