பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் நிலை - 73

திருக்குறள் முழுதையும் வரப்பண்ணுக என்ற நல்லாசிரியன் பொருளறிந்து கற்க என மறித்து அறிவூட்டுவது போல, ஈட்ட வேண்டுவது பொருளல்லது பிறிதில்லை என்ற வள்ளுவப் பெருமகன், நெறியோடு ஈட்டுக’ என அடுத்து வழிப்படுத்துவர்.

நண்பர்களே. ‘இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக’ (712) என்னும் அவை யிலக்கணப்படி என் சொற்பொழிவைக் கேட்கும்போதே உங்கட்கு என்னென்ன ஐயம் எழக்கூடும் என்று நான் கருதுகிறேனோ அவற்றை அவ்வப்போதே விளக்கி மேற்சேறல் நல்லது. இன்றேல் ஐயங்கள் பலவாய் மறந்து போதலும் கூடும். மாக்கள் சேர்த்து வைத்துப் பின் அசைபோடும் உடற்கூறு உடையவை. மக்களோ, புகுந்த உணவை உடனடியாக உண்பவர். நம் உடற்கூறுக்கு ஒப்பவே நம் அறிவுக் கூறும் அமைந்தது போலும். ஒரு கருத்து புகுந்ததோ இல்லையோ நம்மறிவு உடனே அதன்மேல் நோக்கம் செலுத்துகின்றது. சொற்பொழிவு முழுதும் கேட்டுக்கொண்டு பின் ஆராயலாம் என நாம் எண்ணினாலும், பொருள் புதிது கண்ட குழந்தைபோல அறிவு நம் வயப்படாது, ஒரு பொருளைச் செவிப்பட்ட அப்பொழுதே ஆராயத் தொடங்கி விடுகிறது. ஆதலின் என்னுரையைக் கேட்குதொறும் தோன்றும் ஐயக்களையை அகற்றிச் செல்ல எண்ணுவல்.

“ஈட்டுதலை முதற்கண் மொழிந்து தீதின்றி ஈட்டு நெறியைப் பின்னர் மொழிப திருவள்ளுவர் என்று என் விளக்கம் கேட்ட நீங்கள், நெறிக்கு முதன்மை இவ்வாசிரியர் கொடுத்தாரலரோ என ஐயப்படுவீர்கள். “ஈட்டின் தீதின்றி ஈட்டுக; அன்றேல் ஈட்டற்க என்ற ஒரேயடியாக விதித்திருந்தால், நீவீர் ஐயங்கொள்ளிர். இவ்வைய வுணர்ச்சி நமக்குத் தோன்றுவானேன்? நாம் காந்திப் பெருமகன் காலத்து வாழ்ந்து வருகிறோம். அவர் மாசில் வாழ்க்கையைக் கண்ணாரக் கண்ட பேறுடையோம். சான்றோருள் சான்றோராகிய இத்தோன்றல் மேற்கொண்ட வினையும் தூய்தாதல் கண்டோம். அவ்வினை முடிப்பான் கையாண்ட நெறியும் தூய்தாதல் கண்டோம்; நெறிமாட்சியின் சிறப்பினாலன்றோ, உரிமை பெற்ற இந்தியா வுக்கு, மீண்டும் ஆங்கிலேயரின் முதற்றலைவன் ஆயினான்.