பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் நிலை 75

(283), வஞ்சகப் பொருளிட்டம் நீர் பெய்த பசுமட் பாண்டம்போல் உடையானையும் கொண்டு அழியும் (660) எனவாங்கு, தூய் நெறியொடு பொருந்தாவாயின் வரும் பொருட் கேடுகள் பல என்று இடித்துரை சாற்றும் அறஞ்சான்றவர் வள்ளுவர். வழிநலம் கழறுங் குறள்கள் நனி பலவாதலால், திருக்குறள் நெறித்துாய்மையில் தவச்சிறு ஐயமும் நினையற்க.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் (755)

என்னும் ஒரு குறளே பெருங்கரி.

வினையினும் அது முடிக்கும் நெறிக்கண் தூய்மை வேண்டும் என்ற வள்ளுவத்தை ஆசிரியர் சொல்லும் முறையில், ஒரு செயல்முறை யுண்டு என்பதனை யான் வலியுறுத்த விரும்புபவன். தீதற்ற வழியால் பொருளிட்ட வேண்டும் என்பதுதான் அவர் துணிபாயினும், அத்துணிபை வெருவரு நடையில், செயல் மழுக்கு நடையில் கழறிப் பயனென்? ஞால மக்களோ ஒரு நிலையினர் அல்லர். பொருளும் பொருளோ என நிலையாமை பேசி இரந்துண் பாரும், தொழில்போலப் பிச்சை எடுப்பாரும், ஆண் தேனிப்போல மடி பெருக்கி முடங்கிக் கை நொடித்துக் கொட்டாவி விடுவாரும், சூழ்நிலை பாராது தம் சுழிநிலை பார்ப்பாரும், முயற்சி விட்டுக் குருவிச் சீட்டு எடுப்பாரும், கைத்தொழில் செய்யாது கைக்கோடு காண்பாரும் ஆக வினைவாய்ப்படா மாக்கள் நம்மிடைப் பலர். இன்னோர்க்கெல்லாம் நெறிமுதன்மை என் செயும் செயல்வாய்ப் பட்டார்க்கன்றே நெறிவாய்ப்படும் இடம் உண்டு.

எழுத்தறியாதானை விளித்து, கற்றால் இப்படி இப்படித்தான் கற்க வேண்டும்; இன்றேல், கற்றலினும் கல்லாமை நன்று என்று நெறியழுத்தம் கூறின், என்னாம்? கல்வி கண்டு அஞ்சுவான்; கற்கும் எண்ணத்தையே ஒழித்துக் கொள்வான். ‘கல்வி இன்றியமையாதது; பிழை கண்டு மலையாதே; செல்லச் செல்லப் பிழை தானே கழியும்; முதலில் கற்கத் தொடங்கிவிடு’ என்று குளிர்க்கு நடுங்குவானைக் குளத்துத் தள்ளுமாப்போல், செயலில் உய்ப்பது பெரியோர் செயல். இவ்வண்ணமே கற்க எனச் செயலில் உய்த்து, ‘கசடற எனப் பின்னர் நெறி காட்டும் மணமறி புலவர் வள்ளுவர். ‘கற்பவை கசடற