பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல்நூல் என்பதையும் வாழ்வுநூல் என்பதையும் தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்கியுள்ள திறம் வியப்பதற்குரியது. நூலாசிரியரின் நுண்மாண்நுழை புலமும் புலப்பாட்டு நெறியும் ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் செறிந்த பட்டறிவும் வள்ளுவம் நூலுக்கு வளம் சேர்க்கின்றன.

ஆசிரியரின் பெருமித வாழ்வைப்போல, நூலின் நடையும் பெருமிதம் உடையது. செறிவான இலக்கிய நடை, வளமான தமிழ், வற்றாத சொல்லாக்கங்கள், புத்தம் புதிய உவமைகள் நூலுக்கு வளம்சேர்க்கின்றன.

மறைமலையடிகளாரின் ஆய்வுத்திறனும், கொள்கை உறுதியும் திரு.வி.க.வின் சமுதாய நோக்கும் மு.வ.வின் தெளிவும் அமைந்தவர். மூதறிஞர் வ.சுப.மா எனத் திறனாய்வாளர் போற்று கின்றனர். திருக்குறளுக்குச் செவ்விய உரைகண்டவர் பேராசிரியர், ஆழ்ந்திருக்கும் செய்திகளை வெளிக்கொணர்வதில் இவரின் சிறப்புமிக்க புலமை இவருக்குக் கைகொடுக்கிறது. கற்பனைத்தரம், மொழித்தரம்,சிந்தனைத்தரம் ஆகியவற்றை உயர்த்துவதே எழுத்தின் பயன் என்பது ஆசிரியரின் கொள்கை. அவற்றின் குறிக்கோள் நூலாக வள்ளுவம் இயங்குவதை வையம் அறியும்.

இந்நூலின் அருமை பெருமைகளைக் கருதிக் கற்றுவரும் தமிழ் ஆர்வலர்களும் நாளும் பெருகி வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் (1953 - 93) பொலிவு குன்றாது புகழ்பெற்று வரும் ஒப்புயர்வற்ற ஆராய்ச்சி நூலாகிய இதன் தேவை உணர்ந்து இச்செம்பதிப்பினை மகிழ்வுடனும் பெருமிதத்துடனும் வெளியிட்டு பெருமை கொள்கிறோம்.

மாணிக்கனாரின் எழுத்துக்கள் அனைத்தையும் தொகைப் படுத்தி வகைப்படுத்தி வெளியிட்டுப் பெருஞ்சாதனை நிகழ்த்திய பதிப்பகம் நாடு போற்றும் இந்நன்னூலையும் நாட்டிற்கு வழங்கி மகிழ்கின்றது.

இந்நூல் வெளிவரத் தூண்டுகோலாயிருந்த வ.சுப.மா, தொல்காப்பியன் அவர்களுக்கு நன்றி.

பெருநூல்களை ஆழ்ந்து கற்போம்.
பெருமக்களுடன் நல்லுறவு கொள்வோம்.
செந்தமிழைச் செழுமைப்படுத்துவோம்.