பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வள்ளுவம்

ஈகைநிலை, துய்ப்பு நிலைகளையெல்லாம் ஒருங்கு கூட்டிச் சூழ்ந்து யார்க்கும் ஒல்லும்வழி காட்டுபவர் வள்ளுவர். அந்நிலை பலவற்றுள் ஒன்று பின் வருமாறு:

ஒருவன் ஈகை யுணர்ச்சியே நிரம்பியவன். கடமையே குடி கொண்ட உள்ளத்தவன். தானும் தன் குடியும் வாழும் உரிமையை முற்றும் மறந்தவன். ஏதிலார் ஆரத்தமர் பசிக்கச் செய்யும் பேதையோ எனின், அல்லன். அழுந்திய கொடைப் பயிற்சியானும், கனிந்த நெஞ்சு நெகிழ்ச்சியானும் மடம் பட்டவன். உரிமை போற்றாத் தனிக் கடமையன். கைப்பட்டது சிறிதேனும் பெரிதேனும் பிறர்க்கு வழங்கினால் அன்றி மனவமைதி கொள்ளாக் கடமைச் செல்வர். ஞாலத்திடைச் சிலரேயாயினும், இன்றும் உளர். கடன் பட்டும், இரவல் பட்டும், குடும்பக்கடன் போல் கொடைக் கடன் ஆற்றுவார் என்றும் உளர். தாய்க்குக் கொடுத்தால் அவள் தன் மகவுக்குக் கொடுக்குமாப் போலப் பெற்றதை யெல்லாம் பிறர்க்கே ஈயும் அன்பு நிறை நெஞ்சினர், அரியரேனும், நம்மிடை யுளர். ஈத்து உவக்கும் இன்பமே அவர் கண்ட பொருட்பயன். தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் எனப் பொதுப்படவும் தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன் எனத் தனிப்படவும் சங்க இலக்கியம் மொழியும். இன்னோரெல்லாம் உரிமை துறந்த முழுக் கடமை உணர்வினர்.

இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லார்க்கும் கொடுமதி மனைகிழ வோயே! பழந்துளங்கும் முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமணன் நல்கிய வளனே என்ற புறப்பாடல் (163) புலவர் பெருஞ்சித்தரனார் தம் மனைவிக்குக் கூறுவது. இக்கூற்றால் அவர் கொடைத் துடிப்பை அறிகின்றோம். செல்வம் கொண்டு வந்தவர் கணவன் ஆயிற்றே அவரைக் கேட்டன்றோ கொடுப்பது முறை என்று எண்ணிப் பொழுது கடத்தாதே என்பார், ‘என்னோடுஞ் சூழாது’ என உரிமை வழங்கினார். கொண்டு வந்த பொருள் பெருஞ் செல்வம் ஆயிற்றே: பல தலைமுறைக்குப் போதுமே: கட்டிவைத்திருந்தால் நன்னர்