பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை 85

என்பது ஆசான் கொதி நெஞ்சம். இன்மை இடும்பை இரந்து தீர்வாம் (1063) என்றபடி ஒருகால் இரப்புக் கொள்கையைக் கண்டு சினந்த புலவர், ஈண்டு ஈயாக் கொள்கையை - இன்னா உணவுக் காட்சியை - கண்டு சினப்பர். பகுத்து உண்டற்கு உரிய உணவுக் குவியல் இருந்தும் ஈயார் என்று காட்டுவான், நிரப்பிய என்ற சொற் பெய்தார். இலைக்கலத்திலும் ஒரு சோற்றுப் பருக்கை வையாது. கையகத்தும் ஒன்று ஒட்டாது நறுவிதாய் உண்டபின், எச்சிற் கையையும் உதற மனம் நடுங்கும் இக் கொடாநோன்பி களுக்கு, கயவர் என்று பெயர் பூட்டினர். கேட்பித்தாலும் கற்பித்தாலும் தாமே யுண்ணிகள் திருந்தார் என்று உட்கொண்டு போலும், ஈர்ங்கை விதிர்த்தற்கே கொடிறு உடைக்கும் கூன்கையர் வேண்டும் (1077) என்றும். கரும்பு போல் கொல்லப் பயன்படும் கீழ், (1078) என்றும் இடித்துரைத்தனர்.

துய்ப்பு நிலைபற்றி உரையாற்றும் இவ்வமயத்து ஒன்றை நாம் நினைவு கூரவேண்டும். நிரப்பிய தாமே தமியர் உணல் என்ற இடிப்புரை கேட்டு, ‘நன்கு உண்டு உடுத்து ஆடிப் பாடிக் கூடிக் களித்து நுகரும் உலகின்ப வாழ்வை, இகழ்பவரோ வள்ளுவர் என ஐயுற வேண்டா. பொருட் செருக்க்ால் நெறியல்லா நெறி விழைந்து. இன்பம் எனப் பெயரிய துன்பக்குழிபுக்கு, பரத்தை வேட்டுக் கட்சாடி முழுகிச் சூதுத் தொழில் கற்று, வீழ்வாங்கு வீழ்ந்த மக்கட்கும் மருந்து கூறும் அருள் நெஞ்சினர். இவ்வருளால் அன்றோ வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, மருந்து என அதிகார வைப்புத் தொடுத்தனர். மக்கள் உடம்பு பெற்ற நாம் நெடிது உய்யுமாறு மருந்து உணவு சொல்லும் உடல் மருத்துவர். இந்நிலமிசை நீடு வாழுமாறு ஒழுக்க நெறி நிறுத்தும் வாழ்வு மருத்துவர். காதலின்பத்தை உளங்கலந்து நனிதுய்க்கும் அறிவு மக்கட்கு இல்லை என்ற இரக்கமன்றோ, காமத்துப்பால் இருநூற்றைம்பது குறள்களின் பிறப்புக்குக் காரணம். நிரம்பிய ஊண் உண்டலை மறுப்பவரல்லர்; தான் உண்டலை மறுப்பவரும் அல்லர். கடமை மறந்து உண்பதையும், வயிற்றளவு மறந்து கழிபேரிரை எடுப்பதையுமே, இன்பம் அன்று என்ற காரணத்தால் மறுப்பவர். விருந்து புறத்ததாகத் தான் உண்டலையே மறுப்பவர். இன்பப் பெருக்கு தனித் துண்பதால்