பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வள்ளுவம்

‘அளவறிந்து ஈக என்று நினைந்து சொல்லளந்து மொழிந்தனர். அனைத்தையும் ஈக என்பது அறவுயர்ச்சி சான்ற தெனினும், செயலுணர்ச்சியை ஊட்டாது மழுக்குவது. முற்றிகை யுணர்ச்சி கற்றும் கற்பித்தும் வருவதில்லை என்பது கண்கூடு. ஆதலின், கற்றால், கற்பித்தால் கொளத்தகும் அளவறி யிகையையே ஆசான் செயலறமாகக் கூறினர். ‘கற்க கசடறக் கற்பவை என்ற விதி நடைபோல், “அளவறிந்து ஈக என்று விதி நடையில் யாத்தனர். அனைத்தையும் ஒடுக்கிச் சுருட்டித் தன்னையழித்தும் அறவினை செய்’ என்று அஞ்சும் அறம் சாற்றாது, ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும் வாயெல்லாம் செயல் (33) என அறஞ்செய்வானும் வாழ அறமும் வாழ வழிவகுத்தனர். “எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்யவேண்டுதலின், தன்னை ஒம்பலும் அறனாயிற்று” என்பது உரைசான்ற பரிமேலழகர் காரணக் குறிப்பு.

நம் பணியாளனை மாம்பழம் பறித்துவர ஏவுகின்றோம். இருபது பழம் கொண்டு வந்த அவனை, மரத்திலிருந்து கவர்ந்தது இவ்வளவுதானா? என்று வினவுகிறோம். ஆம் என்றவுடன் போகென விடுத்தப் பழம் அனைத்தையும் நாம் நம் குடும்பத்தோடு நுகர்கின்றோம். நுகர்ந்து முடிந்தபின், நுகர்விடத்தைத் துாய்மை செய்வான், அவனை மீண்டும் ஏவுகின்றோம். அவன் நெஞ்சுள் உலவும் நினைவு யாது? மரத்திடத்தே இரண்டு பழம் தின்று வந்தேனில்லையே, அல்லது பறித்தவற்றுள் இரண்டினை ஆங்கே தின்றுவிட்டு, கவர்ந்தன பதினெட்டுப் பழங்களே என்று கொடுத்தேனில்லையே எனத் தீயது செய்யாமைக்கு இரங்குவான். அன்று முதல் பழம் பறிக்கப் பணிப்பினும், பிற கொணரச் சொல்லினும், அவன் உள்ளத்துக் களவெண்ணம் ஒடும். இது மானிடநெஞ்சின் பொது வியல்பு. பறித்து வந்தவன் தின்னும் உரிமையைப் பறித்துவிட்டோம். உரிமையிழப்பு உணர்விற் கலந்து களவாடத் தூண்டுகின்றது. உரியர்ரைப் பற்றும் காதற்களவு போல, உரிமையைப் பற்றும் பொருட்களவும் பலரறியினுங்கூடப் பழிப் பிற்கு இடனாவதில்லை. நிற்க, மரத்திலேயே, கூட இரண்டு பழம் பறித்துத்தின்று வரும்படி அவ்விளைஞனுக்குச் சொல்லுகின்றோம்;