பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

வரிடம் நடக்க வேண்டிய முறையும், குறள் மொழியால் எடுத்துரைக்கப்படும் பொழுது, கேட்டோர் உள்ளம் போலவே கற்போர் உள்ளமும் களிப்புறுகின்றது. நகை யாசையைப் பற்றிப் பேசுவார் போல் தொடங்கிக் கண்ணுக்கு அணிகலமாகும் கண்ணோட்டத்தைக் கூறும் பகுதி நயமாக உள்ளது. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்' பெற்ற ஒன்று, சூதர்' என்னும் பட்டமே எனச் சொற் பொழிவாளர் விரித்துரைத்துப் பரிமேலழகரின் உரை பொருந்தாமையைக் காட்டும் திறன் போற்றத்தக்கது. பெண்களின் கற்பையே உவமையாக அமைத்து ஆண் கற்பைத் திருவள்ளுவர் வற்புறுத்துகிறார் எனச் சுட்டும் இடம் சுவை பயக்கின்றது. உடல் நலம் பற்றிச் சொற் பொழிவாளர் தமிழகத்திற்கு முறையிட்டு இரந்து வேண்டும் வேண்டுகோள் நெஞ்சை அள்ளுகின்றது: இவ்வாறே நூல் நல்கும் விருந்து பல திறத்தன.

கோவைத் திருவள்ளுவர் படிப்பகத்தார் செய்வன திருந்தச் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள். ஆகையால், அவர் அன்று ஆற்றிய அரிய சொற்பொழிவில் ஒவ்வோர சைவும் குறிப்பும் உட்பட அனைத்தும் காத்து ஒலிப்பதிவு செய்து கொண்டு, இன்று அதை நூல் வடிவாக்கிக் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாக்கித் தமிழகத் திற்குத் தந்துள்ளனர். படிப்பகத்தாரின் முயற்சி போற்றத் தக்கது. இதனைத் தமிழகம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்க தமிழுள்ளம்! வாழ்க படிப்பகம்! வாழ்க வள்ளுவம்!

சென்னை, அன்புள்ள, I -10- '53 மு. வரதராசன்