பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 95

இக்குறளின் முழுக்கருத்தையும் எவ்வுரையாசிரியரும் எடுத்துக் காட்டினாரிலர். தோற்றம் என்பதற்குப் பொருளாக உயர்ச்சி-உயர்ச்சி என்று மட்டுமே உரையாசிரியர் பலரும் உரைத்துள்ளனர். பவணந்தி முனிவர் தமது நன்னூலில் மலையின் இலக்கணத்தை,

“அளக்க லாகா அளவும் பொருளும்

துளக்க லாகா கிலையும் தோற்றமும் வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே.”

என்றுகூறி இம்மலையைப் போன்றவர்கள் நல்லாசிரியர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈண்டு இமயமலையினையே எடுத்துக் கொள்வோம். அது அளக்க முடியாத அளவு (அஃதாவது) ஆழம் (அடிப்படை), அகலம், உயரம் உடையது. அதனிடம் அளக்க (அளவிட) முடியாத பல பொருட்கள் உள்ளன. மேலும் அது துளக்க (அசைக்க) முடியாத கெட்டிநிலையும், ஆழ - அகல - உயரத்தோற்றமும் உடையது. நாடு மழையின்றி வறண்டாலும் பல வளப்பங்களைத் தரும் வள்ளல் தன்மை உடையது அல்லவா? இதைத்தான் நன்னூல் பா (சூத்திரம்) அறிவிக்கின்றது. மலையின் இவ் வியல்புகளினும் சிறந்தது அடக்கம் உடையவனது தோற்றம் என்பதையே வள்ளுவர் குறுகிய அடியை உடைய குறளில் சுருங்கச் சொல்லியுள்ளார்.

எனவே, அடக்கமுடையவனது பெருமையை அளவிட முடியாது. அவனிடமுள்ள திறமை - பண்பு முதலிய வற்றையும் அளவிட முடியாது. அவனைப் பகைவர் உட்பட எவரும் அசைக்க (தோற்கடிக்க) முடியாது.