பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வள்ளுவர் இல்லம்

அவ்வளவு ஆழ்ந்து அகன்று உயர்ந்த அறிவும் திறமையும் பண்பும் பிறவும் உடையவன் அவன்.

மேலும் நிலையின் திரியாது’ என்ற தொடரிலுள்ள நயங்களை ஆழ்ந்து காணவேண்டும். மலை என்றாயினும் தான் நின்ற நிலையினின்றும் திரிதலுண்டோ? அது போலவே அடக்கமுடையவனும் விளங்க வேண்டும். மற்றும், சிலர் அடங்காது தம் நிலையினின்றும் திரிந்து பட்டுக்கெட்டு, பின்னர் வேறுவழியின்றி அடக்கமுடையவ ராக மாறுவது உண்டு. இன்னுஞ் சிலர், உள்ளத்தில் நிலை திரிந்து வெளியில் மட்டும் அடக்கம் உடையவர்போல் நடிப்பர். இங்ஙனமெல்லாம் இன்றி, எங்கும் என்றும் உள்ளும் புறம்பும் நிலைதிரியவே திரியாமல் ஒரே அடக்க நிலையில் நிற்பவனே மிகச்சிறந்தவன். அவனது தோற்றமே ‘மலையினும் மாணப்பெரிது. இந்நயங்களையெல்லாம் நாம் உய்த்துணரும்போது திருவள்ளுவர் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?

பொதுவாக ஏழை - செல்வன் எல்லோர்க்குமே அடக்கம் வேண்டியதுதான். ஆனாலும் ஏழையிடம் அடக்கம் இருப்பதில் சிறப்பொன்றும் இல்லை. ஏனெனில் ஏழை யிடம் ஒன்றும் இல்லை. அவனால் ஒன்றும் செய்ய இயலாது. அவன் பிறரை அண்டிப் பிழைக்கவேண்டி இருத்தலின் அடக்கமுடையவனாகத்தான் இருப்பான். அஃது இயற்கையாதலின், சிறப்பாகச் செல்வர்க்கு அடக்க மிருப்பதே வியப்பிற்கு உரியதாகும்; ஏனெனில், செல்வர்கள் தம் செல்வ வளத்தால் எதுவேண்டுமானாலும் எளிதில் பெறலாம் - செய்யலாம்; அவர்கள் யாருக்கும் அஞ்சவோ -