பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வள்ளுவர் இல்லம்

சேர்ந்து ஒழுகும் தீயொழுக்கத்தை மேற்கொள்ள மாட்டார்கள். ஈண்டு, பொருள் கண்டார்” என்பதற் கேற்ப, பிறன் மனைவி என்னாமல், “பிறன் பொருளாள்’ என்று குறிப்பிட்டிருப்பதும் கருதத்தக்கது. மேலும், திருமணமாகிப் பிறனுக்கு மனைவியானவளேயன்றி, திருமணமாகாத கன்னியும் பின்னர் பிறனொருவனுக்கு (உடைமைப் பொருளாக) மனைவியாக வாழ்க்கைப்படப் போகின்றாள் ஆதலானும், கணவணையிழந்த பெண்ணும் பிறனொருவனுக்கு மனைவியாயிருந்தவள் ஆதலானும், எல்லோரையும் அடக்கிப் பொதுவாகப் “பிறன்பொருளாள்’ என்று ஒதினார் ஆசிரியர். மணமாகாத கன்னியையோ கணவனையிழந்த விதவையையோ மணந்து கொள்ளும் உறுதி உடையவன், அன்னாரை மனத்தால் விரும்புவதை இக்குறள் கட்டுப்படுத்தவில்லை. கற்பழிப்பும் காமக்களி யாட்டமும் கூடாவென்பதே முதன்மையான கருத்தாகும்.

அறநெறிக்கு மாறாக நடக்கும் தீயோர்கட்குள் மிகவும் கொடியவர்கள் பிறன் மனைவியை விழைபவரே. ஒருவன் பிறன் மனைவியைக் கற்பழித்தால், அப் பிறன் அறிந்த போது மனைவியைக் கைவிட்டு விடுவான். அதனால் அவனுக்கும் துன்பம், அப்பெண்ணிற்கும் துன்பம்; கற்பழித்த வனுக்கும் நோய், தண்டனை முதலியன கிடைக்கும். மேலும், கற்பழித்தவன் பரம்பரைக்கும், கற்பழிக்கப் பட்டவளின் பரம்பரைக்கும் வழி வழிப் பழிமொழி எழுமாத லானும், வேறு தீச் செயல்களால் இவ்வளவு பழியும்கேடும் இல்லையாதலானும், இப் பிறனில் விழைவது எல்லா வற்றினும் கடைப்பட்டதாகும்.