பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வள்ளுவர் இல்லம்

மன்னிக்க முடியாதன்றோ! எனவே, குடும்பத்தில் சண்டைசச்சரவு மிகைப்படுவதற்குக் கேட்கவா வேண்டும்? ஆகவே, அவர்களின் இல்லறம் நல்லறமாகத் திகழாதன்றோ? அதனாலேயே, பிறன் மனை விரும்புபவன் உண்மையான இல்லறத்தானாகக் கருதப்படமாட்டான்; விரும்பாதவனே அப்பெருமைக்கு உரியவன்.

இன்னும் சிலர், மணந்த தம் மனைவிக்கு இன்பம் அளிக்காமல் பிற பெண்களையே சுற்றித் திரிவர். மனைவி மட்டும் என்ன - மரக்கட்டையா? மனிதப் பெண்ணாகிய அவளுக்கு மட்டும் உணர்ச்சியிராதா? ஏதோ புலனடக்கம் உடையவளாயிருந்தால் தப்பலாம். இல்லாவிட்டால் அவளும் வேறோர் ஆடவனை விரும்ப நேரிடலாமல்லவா? மற்றும், தன் கணவன் கூடா ஒழுக்கத்தால் உடல்நலம் கெட்டுப் புணர்ச்சிக்கு வன்மையில்லாதவனாய் விட்டாலும் அவளது மனம் மாறக் கூடுமல்லவா? அதைக் கணவன் அறிந்தால் என்ன ஆவது? எனவே, பிறன்மனை விரும்புபவனுடைய குடும்பம் உருப்படாது. அவன் உண்மையான குடும்பியாகான்.

‘அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன்.’ பிறன்மனை நோக்காமை ஒரு பெரிய ஆண்மையாகும். அது சிறந்த அறமும் ஒழுக்கமும் ஆகும்.

‘பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு."