பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 131

கூறியுள்ளனர். இஃதே உண்மைக் கருத்தாயின், இக்கருத்திலேயே “நாமநீர்” என்பதை வள்ளுவர் கூறி யிருப்பாராயின், இதனினும் தமிழர்க்கு இழிவு (அவமானம்) வேறு வேண்டியதில்லை. கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் முதலிய சேர மன்னர்களையும், கடலுள் போரிட்ட இளம் பெருவழுதி முதலிய பாண்டிய மன்னர்களையும், அரபிக் கடலிலுள்ள பன்னீராயிரம் பழந்தீவுகளைப் (இப்போதுள்ள மால் தீவுகளை) படையெடுத்து வென்ற இராசராசன் முதலிய சோழ மன்னர்களையும் தலைவர்களாகக் கொண்ட தமிழர் இனமா கடல் நீரைக் கண்டு அஞ்சுவது? திரை கடல் ஒடியும் திரவியம் தேடு’ என்று ஒதிய ஒளவையார் முதலிய பெண்மணிகள் பிறந்த தமிழகமா கடல் நீரைக் கண்டு அஞ்சுவது? அரேபியா, சீனா, பர்மா, இலங்கை, மலேயா, கிரேக்கம், ரோம் முதலிய பலநாடுகளுடன் பன்னூற்றாண்டுகளாகக் கடல் வாணிகம் செய்துவரும் தமிழர் குருதியா கடல் நீரைக் கண்டு கலங்குவது? அனைத்துலகையும் ஆட்டிப் படைத்த ஆங்கிலேயனோடு போட்டியிட்டுக் கப்பலோட்டிய வ. உ. சிதம்பரனார் முதலிய அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர்களைப் பெற்ற தமிழ் இனமா தண்ணீர்ப் பெருக்கைக்கண்டு அஞ்சுவது? வெட்கம்! வெட்கம்! “நாமநீர்’ என்னும் வள்ளுவர் வாய் மொழிக்கு ‘அச்சம்தரும் கடல்’ என்று பொருள் செய்திருப்பது அறியாமை அறியாமை!! வருந்தத்தக்கது!! வருந்தத்தக்கது!! பழைய பரிமேலழகர் எழுதியதில் வியப் பில்லை. பிற்காலத் தமிழர்களும் இவ்விதம் உரை வகுத் திருப்பது வியப்பிற்குரியதாகும். எனவே, நாமம் என்பதற்கு மிகுதி என்பதே இவ்விடத்திற்குப் பொருத்தமான பொருள்