பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வள்ளுவர் இல்லம்

காரணமாயிருப்பதுபோல, நிறைக்குப் பொறை காரணம்அஃதாவது உழைப்பினால் ஊதியம் கிடைப்பதுபோல, பொறையினால் நிறை உண்டாகும் என்பது விளங்கும். பொறை என்றால் - பிறருடைய குற்றங்களையும் அவற்றால் உண்டாகும் துன்பங்களையும் பொறுத்து (சகித்துக்) கொள்ளுதல். நிறை என்றால் - ஒரு வழிப்பட்டு ஒரு காரியத்தைக் கவனியாமல் பல வழிப்பட்டு அலைந்து திரியும் மனத்தை ஒரே நிலையில் நிறுத்தியடக்குதல். பிறரது குற்றத்தையும் அதனால் உண்டாகும் துன்பத்தையும் பொறுக்க முடியாதவரது மனம் ஒரு நிலையில் நிற்கா தன்றோ? அதனாலேயே நிறை இருக்க வேண்டுமென்றால் பொறை இருக்க வேண்டும். பொறையால் நிறையும், நிறையால் காரிய வெற்றியும் கைகூடும். ஒருவர் தமக்குத் தீங்கிழைத்தவரைப் பொறுக்காமல் திரும்பத் தீங்கிழைப்பா ரேயாயின் ஏறத்தாழ அவர்க்கும் இவர்க்கும் என்ன வேற்றுமை இருக்க முடியும் அதனால் ஒறுத்தவரை உலகினர் மதியார்-பொறுத்துக் கொண்டவரின் பெருந் தன்மையை நோக்கி அவரையே மதிப்பர். ஒருவரிடத்தில் ஒர் எளிய துரும்பும் இல்லை; மற்றொருவரிடத்தில் சிறந்த பொன் உள்ளது. இவ்விருவருள் பொன் ஈட்டியவரே சிறந்தவரல்லவா? அதுபோல, ஒறுத்தவர் ஒரு சிறு துரும் பாகவும் (ஒன்றாகவும்) கருதப்பட மாட்டார்; பொறுத்தவரோ உயர்ந்த பொன்னாகப் போற்றப்படுவார்.

தீங்கிழைத்தவர்க்குத் திரும்பத் தீங்கிழைப்பதால் இழைத்த ஒரு நாளைக்கு மட்டுமே மகிழ்ச்சி. பின்னர் இறக்கும் வரையும்-இறந்த பின்னும் இகழ்ச்சியே.