பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 வள்ளுவர் இல்லம்

புகழை - ஏன், தம் முன்னோர் புகழையேகூட இரவலாகத் தம்மேல் ஏற்றிப் புகழ்ந்து கொண்டால் போதுமா? எனவே, ஒவ்வொருவரும் தாமே புகழான செயல்கள் புரிவாராக! புரிந்து புகழோடு வாழ்வாராக!


வள்ளுவர் இல்லம்

தமிழ்த் திருமகனாராகிய - ஏன், உலகப் பெரு மகனாராகிய திருவள்ளுவனார், திருக்குறள் இல்லறவியல் பகுதியில் இருபது தலைப்புக்களின் கீழ், பல கடமைகளைச் சிறப்பாக இல்லறத்தார் பெயரில் கூறியிருப்பினும், பொதுவாக உலக மக்கள் எல்லோர்க்கும் கூறியதாகவே கொள்ளவேண்டும். ஏன்? உலக மக்களை இல்லறத்தார், துறவறத்தார் என்னும் இரு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். துறவறத்தாரோ நூற்றுக்கு ஒருவர் தேறுவதே அரிது. எனவே, மிக மிகப் பெரும்பாலோர் இல்லறத்தார்கள்தானே! எனவே, மக்கள் வள்ளுவர் நெறி நின்று தத்தம் இல்லக் கடமைகளை ஒழுங்காய் நிகழ்த்தினால் அவர்தம் இல்லற வாழ்வு இனிது செழிக்கும்.

பொதுவாக இல்லறவியலின் இருபது தலைப்புக் களையும் கூர்ந்து நோக்கின், மக்கள் ஒருவர்க்கொருவர் ஒத்து உதவி ஒப்புரவு செய்து வாழவேண்டும் என்பதே வள்ளுவர் கருத்தோட்டமாகத் தெரிவதால், அவர் நெறியை உலகமக்கள் பின்பற்றின், உலகமுழுவதும் ஒரே இல்லமாகஒரே குடும்பமாக அமைவது உறுதி.

இதுதான் வள்ளுவர் இல்லம்! வாழ்க!