பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மக்கட் பேறு

உலகில் மனிதர் பெறவேண்டிய பேறுகளுக்குள் சிறந்த பேறு பிள்ளைப் பேறே யாகும். சிறந்த பேறு வேறு இருப்ப தாக இதுவரையும் அறிந்ததும் இல்லை; இனிமேலும் என்றும் அறியப் போவதும் இல்லை.

‘பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற’

என்ன! இல்லற இயலை விளக்க வந்த வள்ளுவர், கணவனுக்கும் மனைவிக்கும் மாட்சிமை வேண்டும் என்றார்; அன்பு வேண்டும் என்றார்; விருந்தோம்புதல் வேண்டும் என்றார்; இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல் முதலியன வும் வேண்டும் என்று இயம்பியுள்ளார்; இவற்றைப் போலவே கணவனும் மனைவியும் பிள்ளைகளைப் பெறுவதிலும் கருத் தூன்ற வேண்டும் என்று கூறியுள்ளாரோ! இதனைக் கூடவா மக்களுக்குச் சொல்லித் தர வேண்டும்? அதிலும் பொதுமறையாகிய திருக்குறளிலா புகல வேண்டும்? அல்லது இக்காலத்துப் போர்களினால் மனிதப் பஞ்சம் ஏற்பட்டதனால் மிகுதியாகப் பிள்ளை பெறுபவர்களுக்குப் பரிசு வழங்கப் படும் என்று விளம்பரம் செய்து தூண்டும் சில நாடு களுக்கு ஏற்பட்ட நிலை, நம்நாட்டிற்கும் வள்ளுவர் காலத்தில் ஏற்பட்டதா? என்றெல்லாம் வேடிக்கையான மனக் கிளர்ச்சிகள் விளையலாம் சிலர்க்கு.