பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 45

மிக்க அறிவுடையவராயிருப்பது மனத்திற்கு மகிழ்ச்சி யளிக்கும்’ என்பதாம். பெற்றோரினும் பிள்ளைகள் அறிவிற் பெரியவராய் விளங்குவதால் பெற்றோர்க்குப் புகழ்ச்சி பெருகுந்தானே!

பத்துத் திங்கள் வருந்திச் சுமந்து நொந்து பெற்ற தாயின் பொறையுயிர்ப்புத் துன்பத்தைப் (பிரசவ வேதனையைப்) போக்கும் மருந்து குழந்தையின் குரலன்றோ? பிறந்த உடனே குழந்தை ‘குவா, குவா என்று குழறுவதைக் கேட்டதும், துன்பத்தில் தோய்ந்துள்ள தாய்க்குக் கட்டுக் கடங்காத களிப்பு மட்டற்ற மகிழ்ச்சி! அம்மகிழ்ச்சியைக் காட்டிலும் தன் பிள்ளை கல்வியறிவில் தேர்ந்தவன் எனப் பிறர் புகழ்வதைக் கேட்டபோது பெரிதும் மகிழ்வாள் தாய்.

‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்’ பிள்ளைகளின் திறமையை அறியும் அறிவு பெண் கட்கு இல்லையாதலின், பிறர் கூறக்கேட்டே அறிய வேண்டும் என்னும் கருத்துப்படப் பொருள் வரைந்துளார் பரிமேலழகர். தாமே அறியுந்திறன் பெண்டிர்க்கு இருப் பினும், இல்லாவிடினும், ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்றபடி தம் சிறப்பில்லாத பிள்ளைகளையும் சிறப்புடையவர்களாகக் கருதுவது பெரும்பாலும் பெற் றோர்க்கு இயல்பாகலின், பிள்ளையின் புகழைப் பிறர் வாயால் கேட்டு மகிழ்வதே பெரு மகிழ்வாகும் என்னும் கருத்துப்படப் பாடியுள்ளார் வள்ளுவர் என்பதைப் பரிமேலழகர் அறிந்திலர் போலும்!