பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வள்ளுவர் இல்லம்

தொடர்பு, ஒழுங்காய்க் குடிகள் நன்மை பெறுவதற்காக! இவற்றைப் போலவே, நம் உயிர்க்கும் உடலுக்கும் ஏற்பட்ட தொடர்பு பிற உயிர்களிடத்து அன்பு பூண்டு வாழ்வதற்காக! எனவே, பிற உயிர்களிடத்து அன்பின்றி வாழும் மக்கள், உயிரும் உடம்பும் ஒன்றாத பிணமாகவே கருதப்படுவர் என்பது தெளிவு.

‘அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போ டியைந்த தொடர்பு’ ‘உயிரும் உடம்பும் ஒன்றியிருப்பது பிற உயிரிடத்து அன்பு செலுத்துவதற்காகத்தான்” என்று திருவள்ளுவர் தெரிவித்திருப்பது பொருந்துமா? இக்குறளின் நோக்கந்தான் என்ன? வள்ளுவர் எதைக் கூறினாலும் நம்பிவிட வேண்டுமா? அதற்கும் ஆதாரம் வேண்டாவா? என்று சிலர் வினவலாம்.

ஒரு மனிதன், எந்த வகையிலும் பிறர் உதவி சிறிதும் தேவையின்றித் தானே தனித்து வாழ முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை! எனவே, ஒருவர்க்கொருவர் உதவிக் கொண்டால்தான் உலகில் வாழ முடியும், என்பது வெளிப்படை! அதற்கு அன்பு தேவைதானே! அன்பு செலுத்தி ஒன்றி வாழத் தெரியாதவர்கள் பிணத்திற்கு ஒப்பாவார். பிணம் எங்கு கிடப்பினும் எப்படிக் கிடப்பினும் பிறர் உதவியைப் பற்றிய கவலை அதற்கு இல்லையல்லவா? ஆனால், அப்பிணத்தின்மேல் அன்பு கொண்டு அதனைச் சிறப்போடு அப்புறப்படுத்துகின்றோம். அதுபோலவே அன்பில்லாத கல் நெஞ்சினர் மேலும் பிறர் அன்புகொண்டு உதவுகின்றனர். ஆயினும் அவர் பிணத்திற்கு ஒப்புத்தானே! இதைத்தான் வள்ளுவர் நயமாக வற்புறுத்தியுள்ளார்.