பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. விருந்தோம்பல்

இல்லறத்தார்கள் தம் இல்லத்திற்கு வரும் விருந்தினரைப் பேணிக் காக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார் வள்ளுவர். விருந்தோம்பல் என்னும் தலைப்பின்கீழ் ஆசிரியர் கூறியுள்ள ஒரு கருத்து உலக வியப்புகளுள் ஒன்றாகும். இப்படி ஒரு கருத்தினை உலகில் எத்துணை அறிஞர்கள் - எத்துணை தத்துவ மேதைகள் - எத்துணைப் பொது நலத்தொண்டர்கள் - எத்துணை சமுதாயச் சீர்திருத்த வாதிகள் சொல்லி யிருப்பார்களோ தெரியவில்லை. இப்படியொரு கருத்தைச் சொன்னால் எல்லோருக்கும் புரியுமா? புரிந்தாலும் எல்லோரும் நம்புவார்களா? நம்பினாலும் எல்லோரும் பின் பற்றி நடப்பார்களா? பின்பற்றி நடந்தாலும் முன்னுக்கு வரமுடியுமா? இவ்வளவு சிந்தனைக்குரிய - இத்தனை வியப்பிற்குரிய - இத்துணை ஆராய்ச்சிக்குரிய அந்தக் கருத்து என்னவென்று பார்ப்போமே! “ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மணந்து கொண்டு இல்லறம் நடத்துவது தம் நன்மைக்காக அன்று; வரும் விருந்தினரைப் பேணிக் காத்தற்கும் பலர்க்கும் உதவி செய்வதற்குமேயாம்’ என்பது தான் அந்தக் கருத்து.

‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு'