பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 63

களல்லவா? இம்முயற்சிகள் எல்லாம் தேவைப்படாமலேயே இவன் நிலத்தில் ஏராளமான உணவுப் பொருட்கள் விளையவேண்டுமல்லவா? அவர்கட்கும் (கருமி - தன்னலக் காரர்), இவனுக்கும் வேறுபாடு இல்லையா? கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? பிறர்க்கு உதவாதவர்களிடம் மட்டும் விதைத்தல் முதலிய முயற்சிகளைப் பெற்றுக் கொண்டு, பிறர்க்கு உதவுபவனுடைய நிலத்தில் எம்முயற்சியும் பெறாமல் ஏராளமாக விளைத்துத் தர வேண்டியது இயற்கையின் கடமையல்லவா? ஏன், அப்படிச் செய்தால் தகாதா? நீதியாகாதா? இதனால் அறவோன் இன்னும் பலர்க்கு உதவமுடியுமே! - என்று இயற்கையை நோக்கி நொந்து வினவுவதைப் போல், ஆசிரியர் விருந்தோம்புபவனது பெருமையைக் குறிப்பாக உணர்த்துவதாகக் கொள்ளலாம். இப்படியாக இந்தக் குறளைப் புதுக்கண் கொண்டு பார்க்கப் பார்க்கப் புதுப் புதுப் பொருள்கள் - புதுப்புது நயங்கள் புலப்படுகின்றன அல்லவா? இக்குறளின் வாயிலாக, விருந்தோம்புவானது உள்ளப் பண்பின் உயர் எல்லை ஓவியப்படுத்தப்பட்டுள்ள தன்றோ?

அடுத்து வள்ளுவர் கூறும் ஒருவகைப் புதிய குடும்பப் பொருளாதாரம் வியத்தற்கு உரியது. அதாவது, விருந்தோம்பிக்கொண்டேயிருப்பதால் செல்வங் குறைந்து குடும்பம் பாழ்படாதாம். மாறாகச் செல்வம் கொழிக்குமாம். முகமலர்ச்சியுடன் விருந்து பேணுபவனது இல்லத்தில் மனமகிழ்ந்து திருமகள் தங்கி வாழ்வாளாம். அவனைத் தேவர்கள் தம் விருந்தினனாக ஏற்றுக் கொள்வார்களாம்.