பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 71

சேர்ந்தவர்கள் தடை செய்யலாம். இருந்தும், நாம் கொடுக்க விரும்பினும், நம்மவர் தடை செய்யாமலிருப் பினும், கொடுக்கப்படுபவர் அப்பொருளை விரும்பா தொழியினும் ஒழியலாம். ஆதலின் நாம் கொடுக்க அவர் பெற சமயம் கூடாவிடினும், முகம் மலர்ந்து இன்சொல் பேசுதலால் எவர்க்கும் எவ்விடுக்கணும் எத்தடையும் இல்லையன்றோ? எனவே, கொடுத்தலினும் இன்சொல் எளிது. இதனால் இன்சொல் சொல்வதொன்றே சாலும் கொடுக்க வேண்டாம் என்று எண்ணிவிடலாகாது. இன் சொல்லோடு ஈதலும் செய்யின், சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தது போலாகும்.

“அகன் அமர்க் தீதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப்பெறின்.’

“யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே” என்றார் திருமுலரும்,

உள்ளே கள்ளம் உடையவர்கள் பிறரைக் கண்டபோது முகம் மலர்ந்தவர் போலவும் இனிய நோக்கினர் போலவும் தம்மை வலிந்து செய்து நடித்து இன்சொல் பேச முயல்வர். அது முறையன்று. அவர் நடிப்பு வெளியிலும் தெரிந்துவிடும். ஆதலின் முகமலர்ச்சி, இன்னோக்கு, அக மகிழ்வு, இன்சொல் என்னும் நான்கும் நாற்காலியின் நான்கு கால்களைப்போல் இருந்தே தீரவேண்டும். ஒன்று குறைந்தாலும் நாற்காலியில் அமர முடியாதல்லவா? இந் நான்கு கால்களின் மேல் அமைந்ததே அறம் என்னும் நாற்காலி.