பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 81

இதுபோலவே கொள்க. அஃதாவது ஒருவரிடம் உதவி பெற்ற நல்லவரின் நாற்பத்தொன்பது பரம்பரைகள், உதவி செய்தவரின் நாற்பத்தொன்பது பரம்பரைகளைப் பாராட்டும் என்பதாம். நாற்பத்தொன்பது என்பதுவே அறுதியிட்ட உறுதிக் கணக்கன்று. ‘பல்லாண்டுகள்’ என்பதன் பதில் மொழியே (பிரதிநிதிச் சொல்லே) “எழுமை எழு’ என்பதாம்! ஒரு மனிதன் தான் இறந்தாலும் தன் மகனிடத்தில் மறைந்து வாழ்கிறான்’ என்ற கருத்தை ‘ராபர்ட் புருக்” (ஆங்கில ஆசிரியர்) போன்ற பல அயன் மொழிப் புலவர்களும் உரைத்துள்ளனரன்றோ? அம்மகன் அவன் மகனிடத்தில் வாழ்வான். அவன் அவன் மகனிடத்தில் வாழ்வான். இப்படியே முன்னோன் தன் பரம்பரையுள் மறைந்து வாழ்ந்து வருகிறான். ஏன், நம் முன்னோர் நம்முள் வாழ்கின்றனரன்றோ! நம் குடும்ப முன்னோரை எவரேனும் குறைத்துப் பேசினால் நமக்கு எப்படி

இருக்கிறது! இக்கண்கொண்டு, திருவள்ளுவர் கூறும் “எழுபிறப்பு எழுமை எழுபிறப்பு’ என்னும் தொடர்களை நோக்குங்கள்! தெளிவு எளிதில் கைவரப்பெறும்.

ஒருவர் தீமையே செய்யாமல் எத்துணை நன்மைகள் செய்தாலும், அவற்றுள் ஒன்றையும் மறக்கவே கூடாது. மற்றொருவர் நன்மையே செய்யாமல் எத்துணை தீமைகள் செய்தாலும், அவையனைத்தையும் செய்த அவ்வப் போழ்தே மறந்து விட வேண்டும். ஒருவரே நன்மையும் தீமையும் மாறி மாறிச் செய்தாலும், தீமைகளையெல்லாம் செய்த அவ்வப்போழ்தே மறந்துவிட்டு, நன்மைகளை எல்லாம் மறவாமல் நினைவு கூர்தல் வேண்டும்.