பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

மிகுந்திருந்தால் உழவன் என்ன செய்வான்? என்று கேட்கிறார். பயிர் வளர வேண்டுமானால், களைகளைக் களைந்து எறிந்தாக வேண்டும். அது போலவே நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி இவற்றை விலக்கி, தக்கார்களைக் காப்பாற்ற வேண்டுமானால், கொடியவர்களைக் களை பிடுங்குவது போல ஒழிப்பதும் அவசியமாம். ஆகவே, தன்னைப் போன்ற மக்களைக் கொல்லுங் குணம் படைத்த மாக்கள் திருந்தவே மாட்டார்கள்; அவர்களைத் திருத்தவும் முடியாது என்பது வள்ளுவரின் உள்ளக் கருத்து என நமக்கு நன்கு விளங்குகிறது. இம் மாதிரிக் கொடியவர்களைத் துரக்கிட்டுக் கொல்வது நேர்மையெனக் கருதுகிறது வள்ளுவரது அரச உள்ளம்.

பிச்சைக்கார உள்ளம்

அரசராயிருந்த வள்ளுவர் திடீரென்று ஆண்டியாய் விட்டார். அசல் ஆண்டியாகவே நடிக்கிறார். பிச்சை கேட்கவும் தொடங்குகிறார். யாரிடம்? செல்வர்களிடம் சென்றா? இல்லை, பிச்சைக்காரர்களிடம் சென்று! ஒரு பிச்சைக்கார மகாநாட்டைக் கூட்டி, அங்கு போய், பின்வருமாறு பிச்சையெடுக்கிறார்.

"இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவன்மின் என்று."

"தோழர்களே, பிச்சையெடுக்கும் தொழில் நமக்கு வேண்டாம். அது இழிந்த தொழில். வேறு வழியின்றிப் பிச்சையெடுக்க நேர்ந்தாலும், வைத்துக்கொண்டே இல்லையென்று சொல்பவரிடம் மட்டும் போய்ப் பிச்சை கேட்காதீர்கள். அது நமக்குள்ள பெருமையைக் கெடுத்துவிடும். இதுவே நான் உங்களை இரந்து கேட்பது" எனக் கூறுகின்றார். எப்படி இந்தப் பிச்சைக்காரர்!