பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கண்டு பிடித்ததாகத் தெரியவில்லை. நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். ஒருவன் இனிமையாகப் பாடுகிறான். அந்த ஓசை காதுகளுக்கு வெகு இனிமையாக இருக்கிறது. ஆகவே செவிக்குமட்டும் இனிமை பயப்பது ஓசை. அடுத்தபடியாக, ஒரு மல்லிகைப் பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு நன்றாக வாசனையுள்ளதாகவும் இருக்கிறது. ஆகவே, மலர், கண், மூக்கு ஆகிய இரண்டு புலன்களுக்கும் இன்பத்தைத் தரும் ஒரு பொருள். மூன்றாவதாக ஒரு மாம்பழத்தைப் பாருங்கள். கண்ணுக்கு அழகாயும் மூக்குக்கு வாசனையுள்ளதாயும் நாக்கால் சுவைத்தால் ருசியுள்ளதாகவும் ஆக மூன்று புலன்களுக்கு இன்பம் அளிக்கக்கூடிய ஒரு பொருளாக அமைகிறது. நான் இப்பொழுது மூன்று புலன்களுக்கு இன்பந்தரும் ஒரு பொருளைப்பற்றிச் சொல்லி விட்டேன். நீங்கள் யாராவது நான்கு புலன்களுக்கும் விருந்தாக உள்ள ஒரு பொருளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

(பதில் இல்லை)

திருநாவுக்கரசர் ஒரு சைவ ஆசிரியர். அவரோடு மாறுபட்ட கருத்துடையவர்கள் அவரைச் சிறையிட்டு, நீற்றறையிலிட்டு எரிக்கின்ற போது, அவர்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டரை பொய்கையும் போன்றதே
ஈசன் எங்தை இணையடி கீழலே.

எனப் பாடினதாகவும், அப்போது நெருப்பும் குளிர்ந்து அவர் உள்ளமும் குளிர்ந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

திருநாவுக்கரசர் இறைவனிடத்துக் கொண்டுள்ள மாறாத பக்தியினால் தீ குளிர்ந்துவிடுமென்ற அழியாத