பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்வாழ்க்கை) இல்வாழ்க்கை என்றால், ஆடவன் மனைவியுடன் வீட்டில் இருந்து நடாத்தும் குடும்ப வாழ்க்கை என்பது பொருள். இல்லறத்தின் பெருமையினையும், அதனால் உண்டாகும் நன்மையினையும், இல்லறத்தாரின் கடமையினையும் தொகுத்து, சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் என்னும் அழகுபட இவ்வதிகாரத்தில் கூறியிருத்தலின், இது முன் வைக்கப்பட்டது. 1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய முவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. (பதவுரை) இல்வாழ்வான் என்பான் - வீட்டில் மனைவியுடன் இருந்து வாழும் குடும்ப வாழ்க்கையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், இயல்பு உடைய - இயற்கையாக உரிமை உடையவர்களாக உள்ள, மூவர்க்கும் - (பெற்றோர், மனைவி, மக்கள் என்னும்) மூவகையார்க்கும், நல் ஆற்றின் (நல்வாழ்வு என்னும்) நல்ல வழியிலே, நின்ற - (உதவியாகக் கிடைக்கப் பெற்று) நின்ற, துணை-துணையாவான். இனி, முறையே மணக்குடவர் உரையும், பரிமேலழகர் உரையும் வருமாறு :- . (மண-உரை) இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் (பிரமச்சாரி, வானப்பிரத்தன், சந்நியாசி என்னும்) இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்ற ஒரு துணை. (பரி-உரை) இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான் (பிரமசரிய ஒழுக்கத்தானும், வனத்தின் கண் தீயோடு சென்ற மனையாள் வழிபடத் தவம் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றுந்துறந்த யோக ஒழுக்கத்தானும் ஆகிய) அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலைபெற்ற துணையாம். வள்ளுவர் கண்ட மனையறம் 3