பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவதாக (தான்) இல்லறத்தான் தன்னையும் ஒம்பவேண்டும் என்று தெரிவித்துள்ளார் திருவள்ளுவர். இஃது சிலர்க்கு வியப்பையும் அளிக்கலாம். அப்படியொன்றும் இங்கு வியப்பிற்கு இடமில்லை. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் பாதுகாத்துக் கேடுகெட்ட மானிடர்கள் எத்துணையோ பேர் உண்டு. இல்லாதவனைப் பற்றி இங்கு எடுத்துரைக்கவில்லை. சிலர் அரும்பாடுபட்டுச் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பார்கள். ஆனால், நல்ல உணவினையோ, உடையினையோ, உறக்கத்தினையோ,உறையுளையோ (இடம்), இன்ன பிற இன்பங்களையோ வேண்டிய அளவு பெற்றிருக்க மாட்டார்கள். என்னே இவர்தம் இரங்கத்தக்க நிலை! தன்னைப் பாதுகாத்துக் கொண்டால்தான், மேன்மேலும் பல நல்ல காரியங்களைச் செய்ய முடியும். எனவே, மேற்கூறிய ஐந்தும் இல்வாழ்வான் இயற்ற வேண்டியவை என்பது இக்குறட் கருத்து. (ஆராய்ச்சி உரை) தென்புலத்தார் என்பதற்கு, முதல் முதல் உலகத்தை உண்டாக்கியபோதே நான்முகனால் (பிரமனால்) உண்டாக்கப்பட்ட ஒரு தெய்வசாதி என்று பரிமேலழகர் பகர்ந்தனர் உரை. ஏன் - இவர்களை, தெய்வம் என்பதற்கு அவர் கூறும் பொருளான தேவர்க்குள் அடக்கிவிடலாமே! தென்திசையில் இருக்கும் இத்தெய்வ சாதியார்கள் நமக்காக என்ன செய்கின்றார்களோ? நாம் இவர்களுக்கு என்ன செய்யவேண்டுமோ? ஒன்றும் புரியவில்லை. ஏனைய தெய்வங்களைப்போலவே இவர்களும் அருள்புரிகின்றார்கள் என்றால், இவர்களையும் தெய்வக்கூட்டத்துள் சேர்த்துவிடுவதால் என்ன இடையூறு? எனவே, இப்பொருள் பொருத்தம் அன்று. மேலும், இப்பொருள் உரைத்தால், யாம் உரைத்தபடி முன்னோரின் நினைவு விழாவிற்கு இடமில்லாமலேயே போய்விடும். இறந்துபோன வீரர் முதலியவர்களுக்கு விழாக்கொண்டாட வேண்டாமா? கொண்டாடியதாகக் கூறுகின்றனவே சங்ககால இலக்கண இலக்கியங்கள் வீரமங்கை கண்ணகிக்கு விழாக் கொண்டாடினானே ஒரு தனித்தமிழ் மன்னனாம் சேரன் செங்குட்டுவன். | 4 பேரா. சுந்தர சண்முகனார்