பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்றமாய்த் தென்படினும் பின்னர்க் கவிழ்த்துவிடும்; ஆதலின் அறத்தாறே என்றும் நின்று நிலைத்து நீடிக்கும் என எச்சரிக்கின்றது இந்தக் குறள். (ஆராய்ச்சி உரை) இந்தக் குறளில் அறத்தாறு புறத்தாறு என இரண்டு நெறிகள் பேசப்பட்டுள்ளன. அறநெறிக்குப் புறநெறி (எதிர்மாறான நெறி) மறநெறி (தீயவழிகள்) என இயற்கையாய்ச் சொல்லமைப்பு-தொடர் அமைப்புகளை ஒட்டியான் உரை எழுதினேன். ஆனால், பழைய உரையாசிரியர்கள், இங்கே எனக்கு மேல் பெரும் புரட்சிப்பொருள் புகன்றுள்ளனர். அவர்தம் துணிவைப் பாராட்டுகிறேன். புறத்தாறு என்பதற்கு, இல்லற வாழ்க்கைக்குப் புறம்பான துறவற வாழ்க்கை - தவவாழ்க்கை என அவர்கள் பொருள் எழுதியுள்ளனர். நல்லமுறையில் இல்வாழ்க்கை நடத்தினால், துறவறத்திற்குச் சென்றுதான் தீரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை; துறவறத்திற்குச் சென்று பெறக்கூடிய நன்மைகளையெல்லாம் இவ்வில்லறத்திலேயே பெறலாம் என்பது அவர்தம் கருத்து. உண்மைதானே! உள்ளத்தில் ஒழுங்கு இல்லாமல், முற்றத் துறந்த முனிவரெனச் சொல்லிக்கொண்டு. காட்டில் திரிந்துதான் என்ன பயன்? காற்றை உண்டுதான் என்ன பயன்? கந்தலைக் கட்டி ஒட்டைச் சுமந்து இரந்து உண்டுதான் என்ன பயன்? ஒன்றும் இல்லை. எல்லாம் வெளிப்பகட்டே! ஆனால், பெண்ணுடன் வீட்டிலே யிருந்து சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், உள்ளத்தில் ஒழுங்கு உடையவர்கள் பேரின்பத்தையும் பெறுவார்கள். இதனை முற்றத் துறந்த முனிவரும் நுகர்ந்து கண்டவரும் (அனுபவசாலியும்) ஆகிய பட்டினத்தாரே பகர்ந்துள்ளார்: "காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி ஒடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவர் ஒங்கு விண்ணோர் நாடேய் இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால் வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே" என்பது பட்டினத்தடிகளின் பாடல். (நாரியர்-பெண்டிர்) பெண்ணுடன் வள்ளுவர் கண்ட மனையறம் 21