பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்ந்திருந்தாலும் அவனது வாழ்வு பதினெட்டு வயதுப் பையனது வாழ்வேயாகும். சாவு-வாழ்வுக் காரியங்களில் சமூகம் அவனுக்கு முதன்மை கொடுப்பதில்லை. நல்ல பிள்ளை குட்டி பெற்ற நரைத்த தலைகளையே நாடுவர் மக்கள், அவர்களுக்குத்தான் மனிதவாழ்வின் முழுப் பூட்டுத்திறப்பும் தெரியும். அவர்களே - அவர்தம் அறிவுரைகளே மற்றவர்க்கு வழிகாட்டியாகும். எனவேதான், இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன், அங்ங்ணம் வாழாது வேறு வழியில் வாழ முயலுகின்ற மற்றவர்க்கெல்லாம் தலைமை தாங்குகிறான். இப்போது புரிந்திருக்குமே இக்குறளின் உட்கிடை! 8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து. (பதவுரை) ஆற்றின் ஒழுக்கி - (ஓர் இல்லறத்தான் தன் மனைவி, மக்கள், துறவிகள் முதலானோரையும்) நல்ல வழியில் நடக்கச் செய்து, அறன் இழுக்கா - (தானும்) நல்லறத்தில் இருந்து தவறாமல் நடத்துகின்ற, இல்வாழ்க்கை-இல்வாழ்க்கையானது, நோற்பாரின் - தவஞ்செய்வாரைக் காட்டிலும், நோன்மை உடைத்து (வலிய) தவத்தன்மை உடையதாகும். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மண-உரை) பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின்பால் ஒழுகும் இல்வாழ்க்கை தவம் செய்வாரினும் வலியுடைத்து. (பரி-உரை) தவம் செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப்பண்ணித் தானும் தன்னறத்தில் தவறாத இல்வாழ்க்கை, அத்தவம் செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (தெளிவுரை) பிறரையும் நல்வழியில் நடக்கச் செய்து தானும் அறம் தவறாது நடத்தும் இல்வாழ்க்கை, தவஞ்செய்வார் வலிமையினும் மிக்க தவவலிமை உடையதாம். - 25 பேரா. சுந்தர சண்முகனார்