பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ஆராய்ச்சி உரை) ஒழுகுதல் தன்வினை - அஃதாவது தான் நடத்தல். ஒழுக்குதல் பிறவினை - அஃதாவது பிறரை நடக்கச் செய்தல். இங்கே ஒழுக்கி எனப் பிறவினையாகக் கூறியிருத்தலின், "மனைவி, மக்கள். துறவிகள் முதலானோரை நல்ல வழியில் நடக்கச் செய்து" என்று பொருள் கூறவேண்டியதாயிற்று. இழுக்காத என்பதில் உள்ள த கெட்டது. இதுதான் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இல்வாழ்க்கை நோன்மை உடையது என்றால், இல்வாழ்வான் நோன்மை உடையவன் என்று கொள்ளவேண்டும். நோன்மை என்பதற்குத் தவம், வலிமை, பொறை முதலிய பொருள்கள் உண்டு. இங்கே சில உரையாசிரியர்கள் வலிமை எனப் பொருள் உரைத்துள்ளனர். சிலர் பொறை எனப் பொருள் புகன்றுள்ளனர். தவம் எனப் பொருள் உரைத்தாம் யாம். ஏன்? தவம் என்றால் ஏதோ தனிப்பட்டது என்று எவரும் தயங்க வேண்டாம்; ஒழுங்கானமுறையில் இல்வாழ்க்கை நடத்துவதும் ஒரு தவமே. மேலும், இவ்வில்லறத் தவம் துறவிகளின் தவத்தைக் காட்டிலும் வலியதும், சிறந்ததும் ஆகும் என்பது எமது கருத்து. இல்லறத்துறவு என்றால் வேறு எதுவும் இல்லை; பொழுது விடிந்து பொழுது போகும் வரையும் தம் மனைவி மக்களை மட்டுமே கட்டியழுதுகொண்டு - அவர்கட்கு வேண்டியவற்றை மட்டுமே தேடி உழன்றுகொண்டு கிடக்காமல், மற்ற மன்பதைக்கும் (சமுதாயத்துக்கும்) தொண்டாற்றுதலே இல்லறத் துறவு. இத்தகைய தொண்டு புரிவோரே "இல்லறத்துறவிகள்" என்பது கருத்து. "தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார்" என மற்றொரு குறளில் கூறியுள்ளபடி, தான் மட்டுமே தனியே அமர்ந்து "மூக்கு விழிகளை" மூடிக்கொண்டு செய்யும் துறவுத் தவத்தைவிட, மனைவி மக்களுடன் மக்கள் சமுதாயத்துக்கும் தொண்டாற்றும் இல்லறத்தவம் எவ்வளவோ சிறந்ததுதானே! இது குறித்தே, "இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மையுடைத்து" என்றார் வள்ளுவர். ஆனால், "எல்லோரையும் ஆற்றின் ஒழுக்கித் தானும் அறனிழுக்காது நடத்துகின்ற வள்ளுவர் கண்ட மனையறம் 27