பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்தில் இருந்துகொண்டு எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாமா? பிறர் பழிக்காதபடி நடந்துகொண்டால்தானே நல்லதாகும் என்பதை அறிவிக்கவே "பிறன் பழிப்பதில்லாயின் நன்று" என்றார் ஆசிரியர். இங்கே "பழிப்பது" என்னுஞ் சொல்லுக்கு, பழித்தலுக்குரிய தாழ்ந்த குலத்து மனைவி எனப் பொருள் எழுதியுள்ள மணக்குடவருக்கு நமது கழிபேரிரக்கம் உரித்தாகுக! 10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். (பதவுரை) வையத்துள் - மண்ணுலகத்திலே, வாழ்வாங்கு வாழ்பவன் - (இல்லறத்தில் இருந்து) வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்து வருபவன், வான் உறையும் - விண்ணுலகத்தில் அமர்ந்திருக்கின்ற, தெய்வத்துள் வைக்கப்படும் - தெய்வங்களுள் ஒருவனாக வைத்து மதிக்கப்பெறுவான். (வையம்- மண்ணுலகு: வான் -மேலுலகு) இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன உரை) இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். (பரி. உரை) இல்லறத்தோடு கூடி வாழுமியல்பினால் வையத்தின்கண் வாழ்பவன் வையத்தானே யெனினும் வானின்கணுரையுந் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். (தெளிவுரை) உலகில் வாழவேண்டிய முறைப்படி இல்வாழ்க்கை நடத்துபவன் விண்ணில் இருக்கும் தெய்வங்களுள் ஒரு தெய்வம்போல் மதிக்கப்படுவான். (ஆராய்ச்சி உரை) இந்தக் குறளில் உலக வழக்கில் உள்ள உண்மையொன்று பொதிந்து கிடப்பதாகப் புலப்படுகின்றது. உலகில் வள்ளுவர் கண்ட மனையறம் 3