பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைத் துணைநலம்) குடும்பவாழ்க்கையில் கணவனுக்குத் துணையாக இருக்கின்ற மனைவியின் குணநலங்களைப் பற்றிக் கூறும் பகுதியாதலின், இதற்கு வாழ்க்கைத் துணைநலம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. கணவனின் கடமைகளைக் கூறும் இல்வாழ்க்கை என்னும் பகுதிக்குப்பின், மனைவியின் மாண்புகளைக் கூறும் இப்பகுதியை அமைத்தது இயைபுடையதுதானே. 1. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (பதவுரை)மனைத்தக்க மாண்புடையள் ஆகி= குடும்பத்துக்குத் தகுந்த மாட்சிமை உடையவளாய், தற்கொண்டான் = தன்னை மணந்துகொண்ட கணவனது, வளத்தக்காள் = செல்வ வளப்பத்துக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்பவளே, வாழ்க்கைத் துணை = உண்மையில் வாழ்க்கைக்குத் துணையாவாள். (மனை - மனையறம்குடும்பம்; மாண்பு = மாட்சிமை - நற்குண நற்செய்கைகள்: தற்கொண்டான் - தன் கொண்டான் = கணவன். வளம் = வந்துகொண்டிருக்கும் செல்வ வளம்). இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன உரை) தான் பிறந்த குடிக்குத் தக்கவொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினையுடையவள் இல்வாழ்க்கைக்குத் துணையாவாள். (பரி. உரை) மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளையுடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை யுடையாள் அதற்குத் துணை. வள்ளுவர் கண்ட மனையறம் 35