பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓரகத்தி இல்லை; ஊர்வம்புக்காரி ஒருத்தியுமே இல்லை. ஆயினும் அடிக்கடி இருவர்க்குள்ளும் இரும்பெரும் போராட்டம் நடக்கின்றது. அதற்குரிய காரணங்களுள் முதலிடம் பெறுவது, மனைவி விரும்பும் பொருள்கள் எல்லாம் வீட்டிற்கு வந்து சேராமையே "அதனால்" அவள் கணவனை மதிப்பதில்லை - பணிவிடை செய்வதில்லை. வேலைகளையும் செவ்வனே செய்து முடிப்பதில்லை. செலவாளிகளாக இருக்கின்ற அண்டைவீட்டு ஆறு முகத்தையும் எதிர் வீட்டு ஏகாம்பரத்தையும் எடுத்து ஈடு காட்டுகின்றாள். நீயும் ஓர் ஆண்மகனா என்று மானத்தை வாங்குகிறாள். குறைந்த வருவாயுடைய கணவன் என்ன செய்வான்? தன் எளிமையை வெளிக்காட்ட வெட்கி, கடன் வாங்கியாவது தொலைக்கிறான். அதன் பிறகு, ஆகா இத்தகைய கணவர் கிடைப்பாரா என்ற புகழ்மாலை வீட்டில் வாங்கிய கடனைக் கொடுக்க வழியற்றவன் என்ற இகழ்மாலை நாட்டில்! செலவானது வரவுக்கு மேற்படாமல் உட்பட்டிருக்குமானால், குறைந்த வருவாயினால் தாழ்வு ஒன்றும் இல்லை என்னும் கருத்தில், "ஆகு ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை போகு ஆறு அகலாக்கடை" எனத்திருவள்ளுவரே தெரிவித்துள்ளார் மற்றோரிடத்தில். எனவே, நூறு காசு ஈட்டி மேலும் பத்துக்காசு கடன் வாங்குபவனைக் காட்டிலும், ஐம்பது காசு ஈட்டி அதில் ஐந்து காசு மிச்சப்படுத்துபவனே மேலானவன் என்ற "மந்திரத்தை" மனத்தில் இருத்தும் மங்கை நல்லாளே சிறந்த வாழ்க்கைத்துணையாவாள். இது குறித்தே, "தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை" என்றார் ஆசிரியர். ஆகவே, மனைவி ஆடம்பரச்செலவுகளை அறவே அகற்ற வேண்டும். கணவன் அவ்வாறு செய்தாலும் அவனைத் திருத்தவேண்டும். இங்கே இன்னொன்றும் கவனிக்கவேண்டும். கருமித்தனமாய் இருக்கவேண்டுமென ஆசிரியர் சொல்லவில்லை. கணவனது வருவாய் வளப்பத்துக்குத் தக ஒழுகவேண்டும் என்றுதான் சொல்லியுள்ளார். எனவே, குறைந்த வருவாயானால் சிக்கனமாயிருக்கவேண்டும். நிறைந்த வருவாயானால் கூடியவரை பிறருக்கு உதவவும் செய்யலாம். 38 பேரா. சுந்தர சண்முகனார்