பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ஆராய்ச்சி உரை) சில சமயங்களில் பெற்றோர் பெரிய துன்பக் கடலுள் மூழ்கியிருக்கும்போது, பிள்ளைகள் வந்து உடம்பைத் தொட்டும், இனிய மழலைகளைப் பேசியும் மகிழ்விக்க, திரும்பவும் பெற்றோர் இன்பக் கடலுள் மூழ்கி இறுமாப்பதைக் காண்கின்றோம். ஆடம்பர உடையில் அவா மிக்க இளைஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் தன் இளமையில் மடிப்புக்கலங்காத (பெட்டி போட்ட) சட்டையை அணிந்துகொள்கின்றான். எவரேனும் அச்சட்டையைத் தொட்டால், "தொடாதே. மடிப்புக் கலங்கிவிடும்" என்று சினக்கிறான். தன் தம்பியோ, தங்கையோ மேலே வந்து விழுந்தால், "நான் கலங்காமல் வெண்மையான உடை உடுத்தியிருக்கிறேன்; ஏன் மேலே விழுந்து அழுக்காக்கினர்கள்?" என்று கூறி அடிக்கிறான். நண்பர் எவரேனும் தோளின்மேல் கையை வைப்பார்களேயானால், பதமாகக் கையை எடுத்துக் கீழே விட்டு, சட்டை கலங்காமல் பார்த்துக் கொள்கின்றான். அவ்விளைஞனுக்கு மணப்பருவம் நெருங்கியது. மணம் நிகழ்ந்தது. குழந்தை பிறந்தது. தெருவிலே, புழுதியிலே விளையாடிக் கொண்டிருக்கின்றது குழந்தை. தந்தை ஆடம்பரமாக உடுத்திக்கொண்டு அயலூர்க்குப் புறப்படலானான். வீட்டை விட்டுத் தெருவிலே காலை வைத்தான். பார்த்தது குழந்தை. புழுதி படிந்த உடம்போடு,"அப்பா நானும் வருகிறேன்" என்று கூறிக் கட்டிக்கொண்டது. விலக்கி உள்ளே அனுப்ப முயற்சிசெய்தான். முடியவில்லை. தேம்பியது குழந்தையின் வாய், தூக்கி மார்போடணைத்துக் கொண்டான் தந்தை. முத்தமிட்டுக் காசு தந்து உள்ளே அனுப்பினான். குழந்தையின் புழுதி படிந்த உடம்பைத் தழுவியதில் தந்தைக்கோர் தனியின்பம் "நானும் வருகிறேன்" என்ற பேச்சில் ஒரு பேரின்பம். தெருவிலே தேரின்மேல் ஏறிப் புறப்பட்ட தந்தையைக் குழந்தை தடுக்க, தந்தை கீழே இறங்கி மார்போடணைத்துக்கொண்டு மகிழ்ந்ததாக ஒரு நிகழ்ச்சி பண்டைய நூலாகிய அகநானுற்றிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வின்பமே இக்குறளில் இயம்பப்பட்டுள்ளது. 6 4 பேரா. சுந்தர சண்முகனார்