வள்ளவர் கோட்டம்●
93
● கவியரசர் முடியரசன்
செழிக்கட்டும் நாடென்று சிந்தித் தாய்ந்து
செந்நாவான் பன்னூறு திட்டம் சொன்னான்
கொழிக்கட்டும் நலமெல்லாம் என்ற நெஞ்சைக்
கூசாமல் பழிக்கின்றார் இல்லை என்றே;
பழிக்கட்டும் மறைக்கட்டும் ஏதோ சொல்லிப்
பார்க்கட்டும் குறைவில்லை; நாட்டு மக்கள்
விழிக்கட்டும் அதன்பின்னர் உண்மை தோன்றும்;
விடியட்டும் இருளுக்கு வேலை யில்லை.
நாட்டுக்கு நலஞ்சேர்க்கும் எண்ணம் ஒன்றே
நாடியவன் சொலுந்திட்டம் கணக்கே யில்லை;
ஓட்டுக்குச் சொலவில்லை ஊரை ஏய்க்க
ஒப்புக்குச் சொலவில்லை உண்மைக் காகப்
பாட்டுக்குள் வழியெல்லாம் சொல்லி வைத்தான்
பார்த்தபினும் இலைஎன்றால் ஊர்சிரிக்கும்;
ஏட்டுக்குள் இருப்பதனை எடுத்துப் பார்த்தால்
எல்லாமே புரிந்துவிடும் நலமும் ஆகும்.
அகில்கொடுத்த புகைமணத்தைப் பேழைக் குள்ளே
அடைத்துவிட முயலுவரேல் அடைந்தா போகும்?
துகிலெடுத்துச் சூரியனை மறைத்து நின்றால்
தோன்றாமல் சுடரென்ன மறைந்தா போகும்?
திகில்கொடுத்த இருள்கிழித்துக் கிழக்கு வானில்
செங்கதிரோன் தகதகக்கத் தோன்றி விட்டான்.
முகில்கிழித்து வெளிக்கிளம்பி முகத்தைக் காட்டும்
முழுமதிபோல் குறள்நெளிகள் ஒளிரக் கண்டோம்.