பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


களும் மலிந்த தனி வழியில் இருபது வயது நிரம்பாத இளம் பெண்ணை அனுப்ப யாருடைய உள்ளம் துணிவு கொள்ளும்? அஞ்சாமை மிக்க அருள் நெறியாளரால் தான் அது முடியும்; 'மகாத்மா'க் களால் தான் முடியும்.

காந்தியடிகள் அறிவுறுத்தி வந்த அருளறக் கொள்கையிலிருந்து அவரே வழுக்கி வீழ்ந்ததாகச் சிலரால் கருதத்தக்க நிகழ்ச்சிகள், அவர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. அவைகளில் நான்கைச் சிறப்பாக ஈண்டுக் குறிக்கிறேன். ஒன்று வெறி நாய்களைக் கொல்லுமாறு அடிகள் ஆணை தந்தது; இன்னொன்று ஆசிரமத்தில் நோய்வாய்ப்பட்ட ஒரு கன்றைக் கொல்லுவித்தது; மற்றொன்று, கெய்ரா மாவட்டத்தில் ஐரோப்பியப் பெரும் போருக்கு ஆள் சேர்த்தது; பிறிதொன்று ஒத்துழையா இயக்கத்தின்போது பிறநாட்டுத் துணிகளைத் தீக்கிரையாக்கியது.

முதலிரண்டிற்கும் அடிகள் அருளறத்தையே காரணமாகக் காட்டுகிறார். பின்னிரண்டு நிகழ்ச்சிகட்கும் அரசியலைக் காரணமாகக் காட்டுகிறார். அவ்விளக்கங்களை அடிகளின் 'சத்திய சோதனை'யில் காணலாம்.