பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


இவ்விரண்டு குறட்பாக்களும் 'இறைமாட்சி' என்ற அதிகாரத்தின் உயிர்த்துடிப்பு எனலாம். முதற்குறள் அரசியலை (Politics) யும், இரண்டாம் குறள் பொருளியலை (Economics) யும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றன. இவ்விரு குறட்பாக்களும் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறப்பட்டிருக்கின்றன. இப்பாக்களின் வைப்பு முறையை நோக்கின், அரசியலின் அடிப்படையிலேயே ஒரு நாட்டின் பொருளியலும் அமைந்திருக்கும் என்பது புலனாகும்.

'தனக்கோதிய அறத்தினின்றும் வழுவா தொழுகி, அறமல்லாதவற்றைத் தன்னாட்டின்கண் நிகழாமல் கடிந்து, வீரத்தில் வழுவாத தாழ்வின் மையினை யுடையான் அரசன்' என்பது முதற் குறளின் பொருள். இக் கொள்கைகட்கு மாறுபட்டு நடக்கும் எவ்வரசும் உண்மை அரசு ஆகாது.

'தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேலும் உளவாக்கலும், அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்தவற்றை மக்களின் நலன் பொருட்டு விடுத்தலும் வல்லவனே அரசன்' என்பது இரண்டாம் குறளின் பொருள். இக் குறட்பாவில் வகுத்துக் கூறப்படும் கொள்கைகளே உண்மையான பொருளியற் கொள்கைகள்.

இவ்விரு குறட்பாக்களும், சட்டம் (Law), அறமுறை (Justice), ஒறுப்பு (Punishment), வீரம் (Force), மானம் (Respect), பொருளாதாரத் திட்டங்கள் (Economic Plannings), ஆக்க வேலைத்