பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


கோள்களை அருளறத்தின் அடிப்படையில் அடைய வேண்டுமென்பது காந்தியடிகளின் கொள்கை, 'முதலாளிகள் என்பவர்கள் ஒரு நாட்டிலுள்ள செல்வத்தின் பாதுகாவலர்கள்; உரிமையாளர்கள் அல்லர்' என்பது காந்தியப் பொருளாதாரம்.அதன் படி செல்வர்கள் தம் செல்வத்தை ஏழை மக்கட்கு மனமுவந்து பிரித்துக் கொடுக்கவேண்டும். நிலக்கொடை இயக்கம் காந்தியத்தின் முதல் வெற்றி.

'சட்டங்களைக் காட்டி மருட்டி மக்களை நேர்மையில் செலுத்துவது கூடாது. மக்களே பண்பட்டவர்களாக மாறி அறவழியில் நடக்கவேண்டும்' என்பது காந்தியடிகளின் அரசியல். வினோபாபாவே 'சம்பால்' பள்ளத்தாக்கில் கொள்ளையர்களைத் திருத்துவதற்காக ஒரு சுற்றுப் பயணத்தை மேற் கொண்டாரென்றும், அக்கொள்ளையர் தம் கொலைத் தொழிலை விட்டு அவரைப் பணிந்தனரென்றும் செய்தித்தாளில் படித்தோமல்லவா? இது காந்தியத்தின் இரண்டாவது வெற்றி.

உலக நாடுகளெல்லாம் போர்க் கருவிகளைக் கடலில் எறிந்து விட்டு அருளறத்தைக் கைக்கொள்ள வேண்டும். பிற நாட்டினரைத் தம் உடன் பிறந்தவராகக் கொள்ளவேண்டும். வல்லரசுகள் ஆதிக்க வெறியைக் கைவிட வேண்டும். 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற தமிழர் பண்பாடு, உலகின் உயிர்த்துடிப்பாக மலர வேண்டும். இது காந்தியடிகளின் 'சர்வதேச அரசியல்.'