பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. வாய்மை


காந்தியடிகள் கடைப்பிடித்தொழுகிய அறங்களில் தலையாயது வாய்மை என்பது சொல்லாமல் விளங்கும். தம்முடைய வாழ்க்கையை வாய்மையின் ஆய்வுக் கூடமாகவே அவர் கருதினார். அதனால்தான், தாம் எழுதியுள்ள சுய சரிதைக்கு, ‘உண்மையின் ஆய்வு’ எனப் பெயரிட்டார். ‘சத்திய சோதனை’ என்று கூறினும் பொருந்தும். தம் வாழ்வில் தமக்கு நேர்ந்த ஒவ்வொரு நெருக்கடியையும், துன்பத்தையும், வாய்மைக்கு நேர்ந்த சோதனையாகவே அவர் கருதினார்; அத் துன்பங்களில் தாம் பெற்ற வெற்றியை, வாய்மையின் வெற்றியாகவே கருதினார். வாய்மை அடிகளின் வாழ்வில் நீக்கமறக் கலந்து விட்டது. அடிகளையும் வாய்மையையும் தனித்தனியே பிரித்தறிதல் முடியாது. அடிகளின் உள்ளத்தில் அரும்பிய ஒவ்வோர் எண்ணமும், அவர் வாயினின்றும் வெளிக் கிளம்பிய ஒவ்வொரு சொல்லும், அவர் மெய்வழி இயங்கிய ஒவ்வொரு சிறு செயலும் வாய்மையின் முத்திரை பெற்று விளங்கின. ஏன்? அவர் உயிர்ப்பும் வாய்மை மணம் கமழ்ந்தது.