பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மெய்மை என்றும், உண்மை என்றும், சத்தியம் என்றும் போற்றப்படும் இவ்வாய்மை அறத்தை இனிக் குறள் என்னும் துலாவில் ஏற்றி, அதன் பொருண்மை காண்போம். எப்பொருளை எடுத்துக் கொண்டாலும், அதிகாரத்தின் முன்னமைந்த குறட்பாக்களில் அப்பொருளின் தன்மையை விளக்கிக்கூறுவது வள்ளுவர் கொள்கை; இடையில் அமைந்துள்ள பாக்களில் அப்பொருளின் ஏதுக்களைக் கூறுவர்; இறுதியில் அமைந்துள்ள பாக்களில், அப்பொருளை மேற்கொள்வதால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆராய்வர். இம்மரபின்படி வாய்மை அதிகாரத்தின் முதற்குறள், அவ்வறத்தின் தன்மையை விளக்கிச் சொல்லுகிறது.

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை யிலாத சொலல் ”

—என்பதே குறள். ‘மெய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாதென்று வினவின், அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்’ என்று அப்பாவிற்குப் பொருள் விரிக்கிறார் பரிமேலழகர். ‘தீமை யிலாத சொலல்’ என்ற தொடரில் 'சொலல்' என்ற சொல் ஆராய்ச்சிக்குரியது. ‘தீமை யிலாத சொலல்’ மட்டும்தான் வாய்மையா? அப்படியெனில் தீமையை உள்ளத்தால் எண்ணலாமா? தீமையை உடலால் செய்யலாமா? என்பன போன்ற ஐயப்பாடுகள் எழும். ஆனால் அவ்வையப்பாடுகள் நுனித்துணர்வாருக்குச் சூறைக்காற்றில் பட்ட சருகுபோல் பறந்தொழி-