பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

யும். விதையொன்று போடச் சுரையொன்று முளைக்குமா? வற்றிய பாலையில், கதிர் முற்றிய செந்நெல் குலுங்குமா? சாக்கடைச் சேற்றில் சந்தனம் வளருமா? தீமையும் பொய்மையும் படிந்த உள்ளத்தில் தீமையில்லாத சொல் எவ்வாறு கருக்கொள்ளும்? எண்ணத்தின் ஒலி வடிவமன்றோ சொல்! எண்ணத்தில் களங்கம் காணின், சொல்லிலும் களங்கம் படிந்திருத்தல் உறுதி. எனவே, உள்ளம் தீமையற்றிருந்தால் தான், சொல்லும் தீமையிலாது வரும். பின் உடலின் நிலை யாதென்று காண்போம். முதற்கண் உடலுக்கும், உள்ளத்திற்கும், வாய்ச்சொற்கும் உள்ள தொடர்பை அறிவோம். உடல் பருப்பொருள். உள்ளம் உடலின் கண் அமைந்த நுண்பொருள், வாய்ச்சொல்லும் உடலின் துணை கொண்டு உருப்பெறும் நுண்பொருளே. உள்ளத்தின் துணையின்றி உடலும், உடலின் துணையின்றி உள்ளமும் இயங்குதல் முடியாது. அவ்வாறு இயங்கும் வாழ்க்கை பேய் வாழ்க்கை; பித்து வாழ்க்கை; நோய் வாழ்க்கை, உள்ளத்தின் வழியே மெய்யும் வாயும் நின்றொழுகும் வாழ்க்கை தான் உண்மை வாழ்க்கை. உள்ளத்தாலும் உடலாலும் தீமை பாராட்டுவான், யாதொன்றும் தீமையிலாத சொலல் எங்ஙனம்? அவ்வாறு ‘தீமை யிலாத சொலல்’ கைவரப் பெற்றவன் ‘மனோ வாக்குக் காயம்’ என்னும் முக்கரணத் தூய்மையும் கைவரப் பெற்றவன்.

நிற்க, அகம் தூய்மையுறுவதே வாய்மையினாற்றான் என்பது வள்ளுவர் கொள்கை. உடல்