பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

எவ்வாறு நீரினால் அழுக்கு நீங்கித் தூய்மை பெறு கிறதோ, அதுபோல் உள்ளமும் வாய்மையினால் மாசு நீங்கித் தூய்மை பெறுவதாகக் கூறுகிறார்.

“புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்”

–என்பதே அக்குறள்.

ஞாயிறு, திங்கள், தீ ஆகிய பலவும் உலகின் புறத்திருளைக் கடியும் ஆற்றல் பெற்றவை. ஆனால் இவற்றானும் நீங்காத பேரிருள் ஒன்று உண்டு. அதுவே அறியாமை என்னும் இருள். இவ்விருளைப் போக்கச் சான்றோர் ஒரு கைவிளக்கு வைத்திருக்கின்றனராம். அதை வள்ளுவர் பெருமான்,

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு”

—என்று விளக்கிப் போந்தார். மேலும், ‘மானத்தோடு பொருந்த வாய்மையைச் சொல்பவன், தவத்தோடு தானஞ் செய்வாரினும் சிறந்தவன்’ என்றும், ‘பொய்யாமை யன்ன புகழில்லை’ என்றும், ‘அப்பொய்யாமையே மறுமைக்குரிய எல்லா அறமும் தரும்’ என்றும் பொய்யில் புலவர் பொருளுரை பகர்கிறார்.

இவற்றோடு அமையாமல், ‘மெய்ந்நூல்கள் பலவற்றுள்ளும், வாய்மையின் மிக்கனவாக யாதொரு தன்மையானும் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை’ என்றும், ‘அறங்களில் மிக்க